தைவான் நாட்டில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் சோதனை முயற்சி பெரும் தோல்வியில் முடிந்தது. விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களிலேயே ராக்கெட் பாதை மாறி கிராமங்களை நோக்கிப் பாய்ந்து விழுந்து நொறுங்கியதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.
பாதை மாறிய ராக்கெட்
தைவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புதிய ராக்கெட் சோதனை ஆகஸ்ட் 19 அன்று மேற்கொள்ளப்பட்டது. ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணை நோக்கிச் சீறிப் பாய்ந்த சில நிமிடங்களிலேயே, எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தனது நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து முற்றிலும் விலகியது. கட்டுப்பாட்டை இழந்த அந்த ராக்கெட், அருகில் இருந்த குடியிருப்பு கிராமங்களை நோக்கி மிக வேகமாகப் பாய்ந்து சென்றது.

ஏவுகணைத் தாக்குதல் என மக்கள் பீதி
விண்ணில் சீறிப் பாய்ந்த ராக்கெட் திடீரென கிராமங்களை நோக்கித் திசைமாறி வந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், எதிரி நாடான சீனா ஏவுகணைத் தாக்குதல் நடத்துகிறதோ என அஞ்சி அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் கடும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
எனினும், கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட் நல்வாய்ப்பாக மக்கள் நடமாட்டம் இல்லாத மலைப்பகுதியில் சென்று பயங்கர சத்தத்துடன் விழுந்து நொறுங்கியது. இதன் காரணமாகப் பெரும் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் சோதனையிலேயே ராக்கெட் விபத்துக்குள்ளானதற்கான காரணங்கள் குறித்து விண்வெளி விஞ்ஞானிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
