மகாராஷ்டிராவில் வினோதமான முறையில் வெளிச்சத்திற்கு வந்த தேர்வு முறைகேடு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப் பணிக்கான தேர்வில் தனது முன்னாள் காதலி தேர்ச்சி பெற்ற ஆத்திரத்தில், இளைஞர் ஒருவர் வினாத்தாள் கசிந்த உண்மையை ஆதாரத்துடன் தேர்வாணையத்திற்குப் புகாராக அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பெண்ணின் தந்தை உட்பட 6 பேரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விசித்திரமாக அம்பலமான முறைகேடு:
மகாராஷ்டிராவில் மருந்து ஆய்வாளர் (Drug Inspector) பணிக்கான அரசுத் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இத்தேர்வில் பெண்ணொருவர் தேர்ச்சி பெற்றிருந்தார்.
இருப்பினும், அவரது முன்னாள் காதலரான ராஜேந்திர படேல் என்பவருக்கு இதில் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசியவிடப்பட்டு, அதன் மூலமே அந்தப் பெண் தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற உண்மையை ராஜேந்திர படேல் கண்டறிந்துள்ளார்.
தேர்வாணையத்திற்குப் பறந்த இ-மெயில்:
முன்னாள் காதலி அரசுப் பணியில் தேர்ச்சியடைந்ததைச் சகித்துக் கொள்ள முடியாத ஆத்திரத்தில், வினாத்தாள் கசிவு தொடர்பாகத் தேர்வாணையத்திற்கு மின்னஞ்சல் (E-Mail) மூலமாக ராஜேந்திர படேல் ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்ட போது, தேர்வு நடைமுறைகளில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதிகாரிகள் உட்பட 6 பேர் கைது:
போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாளைப் விலைக்கு வாங்கித் தனது மகளுக்குக் கொடுத்த பெண்ணின் தந்தை மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் உட்பட மொத்தம் 6 பேரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முன்னாள் காதலி மீது கொண்ட ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் புகார் அளித்ததன் மூலம், மகாராஷ்டிராவில் நடந்த அரசுத் தேர்வு முறைகேடு வினோதமான முறையில் அம்பலமாகியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் பயங்கரம்: கங்கை ஆற்றங்கரையோரம் பயிற்சி விமானம் நொறுங்கி விபத்து – 2 விமானிகள் பரிதாப பலி!
