டெல்லி ஜந்தர்மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, மாணவியின் தந்தையைக் கடுமையாகத் தாக்கிய இன்ஸ்டாகிராம் பிரபலம் ஸ்வதந்திரா பரத்வாஜ் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் மீது கொலை முயற்சி மற்றும் போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜந்தர்மந்தரில் தீவிரமடைந்த போராட்டம்
டெல்லி ஜந்தர்மந்தரில் ‘கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’ (சிஜேபி) சார்பில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்ற பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் நிஷூ ஆசாத் என்ற மாணவி தனது தந்தை சஞ்சய் என்பவருடன் கலந்துகொண்டார். அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அங்கு வந்த கும்பல் ஒன்று மாணவியின் தந்தை சஞ்சயைக் கடுமையாகத் தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

சர்ச்சை பேட்டியும் காவல் நிலைய முற்றுகையும்
இச்சம்பவம் குறித்து உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான ஸ்வதந்திரா பரத்வாஜ் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் தான் நிஷூ என்ற மாணவியின் தந்தையின் மண்டையை உடைத்தேன். ஆனால், எனக்கு உள்ள அரசியல் செல்வாக்கால் தப்பித்துவிட்டேன்” என்று கொக்கரித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், அவரை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் சிஜேபி கட்சியினர் நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்தைப் பேரணியாகச் சென்று முற்றுகையிட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ், “முதல் நாளில் இருந்தே எங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக அந்த சிறுமியும் அவரது தந்தையும் கலந்துகொண்டனர். அவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைக் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்ய வேண்டும். 72 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்வதாகக் காவல்துறை உறுதியளித்துள்ளது” எனத் தெரிவித்தார்.
போக்சோ பாய்ந்தது – பிரபலம் கைது
காவல்துறையினரின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ஸ்வதந்திரா பரத்வாஜை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்துள்ள பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் மீது ‘போக்சோ’ (POCSO) சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மீது கொலை முயற்சி, போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள பரத்வாஜ், தீவிர இந்துத்துவ ஆதரவு கருத்துகளுடன் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
