தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாரதிதாசன், அரசு வழங்கிய ரூ. 3 லட்சம் மாதாந்திர மதிப்பூதியத்தை முழுமையாக மறுத்துள்ளார்.
மேலும், அந்தத் தொகையை மரங்களை அகற்றும் பணிகளுக்கே பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளமை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற ‘செழுமை கருவூலம்’ என்ற சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மரங்களை அகற்றும் பணிகளைக் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. செல்வம் மற்றும் வட மாவட்டங்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாரதிதாசன் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதிப்பூதியத்தை மறுத்த நீதிபதி:
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. ராஜசேகர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாரதிதாசன் எழுதிய கடிதம் ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அந்தக் கடிதத்தில், தமிழக அரசு தனக்கு வழங்கி வந்த மாதாந்திர மதிப்பூதியமான ரூ. 3 லட்சம் தனக்குத் தேவையில்லை என்றும், ஊதியம் இல்லாமல் இந்தப் பணியைச் செய்ய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த மதிப்பூதியத் தொகையை சீமைக் கருவேல மரங்களை அகற்றி ஒழிப்பதற்கோ, பாதிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுப்பதற்கோ அல்லது இந்தத் திட்டத்தின் வேறு நல நடவடிக்கைகளுக்கோ முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தனது மதிப்பூதியத்தை அரசிடமே திருப்பியளித்து, இலவசமாகச் சேவை செய்ய முன்வந்துள்ள இந்தச் செயல் நீதிமன்றத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
