தமிழக அரசியலில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கு விவகாரம் மற்றும் இடைத்தேர்தல் அரசியல் குறித்து திமுக சிறுபான்மை நலன் துணைத்தலைவரும் வழக்கறிஞருமான அலிம் அல் புகாரி ‘லிபர்ட்டி தமிழ்’ ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பல அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


இடைத்தேர்தல் லாபத்துக்காகத் திசை திருப்பும் தவெக!
கிரானைட் தொழில் அதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் திமுக அரசு முந்தைய காலத்தில் அவரைத் தப்பிக்க வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள அலிம் அல் புகாரி, இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார். வரவிருக்கும் இடைத்தேர்தலில் தங்களின் தோல்வி பயத்தை மறைக்கவும், அரசியல் ஆதாயம் தேடவும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இது போன்ற மட்டமான நாடகங்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
ரகசிய ஆவணங்களைக் கசிய விட்டது யார்?
வழக்கின் விசாரணை தொடர்பான ரகசிய ஆவணங்கள் மற்றும் ‘ஃபர்தர் ஆக்ஷன் டிராப்’ (Further Action Drop) போன்ற முக்கியக் குறிப்புகளைச் சட்டத்திற்குப் புறம்பாக வெளியே கசியவிட்டது யார் என்று கேள்வி எழுப்பிய அவர், இதன் மூலம் வழக்கின் உண்மைத் தன்மையை மறைத்து, திசைதிருப்பும் வேலையை தவெக செய்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும், திமுக மீதும் தேவையற்ற அவதூறுகளைச் சுமத்தும் அமைச்சர்களின் செயல் கண்டிக்கத்தக்கது என்றார்.
உண்மையான குற்றவாளிகள் தப்பவிடப்படுகிறார்களா?
இந்த வழக்கில் ஜெம் வீரமணியோடு தொடர்புடைய பிற முக்கியப் புள்ளிகள் மற்றும் அவரது நண்பர்கள் யார் என்பதைக் கண்டறிந்து விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் தவெக தரப்பு ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார். இடைத்தேர்தலை மையமாக வைத்து ஏழை எளிய மக்களின் நீதியைக் கேடயமாகப் பயன்படுத்தி அரசியல் செய்வதை தவெக தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
