Homeசெய்திகள்கட்டுரைதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் இடம்பெறுமா? – தோழர் கனகராஜ் பதில்!

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் இடம்பெறுமா? – தோழர் கனகராஜ் பதில்!

-

- Advertisement -

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாநிலத்தில் அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கனகராஜ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

we-r-hiring

‘மார்ஷல் மீடியா’ (Marshal Media) யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், தமிழக அரசின் செயல்பாடுகள், காவல்துறையின் நடவடிக்கைகள் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார்.

தொடரும் கொலைகள் – காவல்துறை மீது குற்றச்சாட்டு!

தேர்தல் பிரச்சாரத்தின்போது சட்டம்-ஒழுங்கு குறித்து வலியுறுத்திப் பேசியவர்கள், தற்போது ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஒரே நாளில் எட்டு கொலைகள் நடைபெறும் சூழலைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக கனகராஜ் விமர்சித்துள்ளார்.

தமிழகக் காவல்துறை உரிய கட்டுப்பாடின்றிச் செயல்படுவதாகவும், மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், சிறைச்சாலைகளில் இருந்தும், நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் வழியிலும் கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் நடைபெறுவதைச் சுட்டிக்காட்டிய அவர், விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரே தண்டனை வழங்க முற்படுவது சட்டத்தின் ஆட்சிக்குச் சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கு ஆதரவு அளித்தாலும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம்!

தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்தாலும், மக்கள் விரோத நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டால் அதனை எதிர்க்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் தயங்காது என்று கனகராஜ் தெரிவித்துள்ளார்.

“கூட்டணி தர்மத்தை விட மக்களுக்கான தர்மமே எங்களுக்கு முக்கியம். ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் மௌனமாக இருந்தால் எங்களின் சுயத்தன்மையை இழந்துவிடுவோம்” என்று அவர் கூறியுள்ளார்.

வேலைநேர அதிகரிப்பு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பாக அரசின் சில முடிவுகளைத் தடுத்து நிறுத்தியதையும் தனது நேர்காணலில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் – கட்சியின் நிலைப்பாடு என்ன?

வரவிருக்கும் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய கனகராஜ், கட்சித் தாவல்களையும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் அரசியலையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வியூகங்கள் தொடர்பாகக் கட்சி தனது கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் மீண்டும் இடம் பெறுமா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி?

திமுகவுடன் ஏற்கெனவே இருந்த கூட்டணி மீண்டும் தொடருமா என்ற கேள்விக்கு பதிலளித்த கனகராஜ், கட்சியில் தனிநபர்கள் யாரும் தன்னிச்சையாக முடிவெடுப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழல் மற்றும் இடைத்தேர்தல் வியூகங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூடி விவாதிக்கும் என்றும், அதன் அடிப்படையில் மக்களின் நலன் சார்ந்த உரிய முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

அரசின் சண்டித்தனத்திற்கு மௌனம்; சினிமாவிற்கு மட்டும் ‘சண்டியரா’ கமல்? – திராவிட சிந்தனையாளர் வே.மதிமாறன் சரமாரி விமர்சனம்!

MUST READ