இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அந்த அமைப்பிற்குள்ளேயே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.


தலைமை ஆணையர் தொடர்பாக தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பு!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தில், சக தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.
புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம்-6 (Form 6) நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்திலும் இரு தேர்தல் ஆணையர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். சட்ட விதிகளில் மாற்றம் செய்யாமல் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக விவேக் ஜோஷி சுட்டிக்காட்டியதாகவும், சுக்பீர் சிங் சாந்து இந்த மாற்றங்களை “அதிகாரப்பூர்வமற்றவை மற்றும் சட்டவிரோதமானவை” என குறிப்பிட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் draft வாக்காளர் பட்டியலில் நீக்கம்!
நாடு முழுவதும் ‘ஸ்பெஷல் இன்டென்சிவ் ரிவிஷன்’ (SIR) என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் தொடர்பாகவும் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணை அறிக்கையின்படி, பீகாரில் தொடங்கிய SIR நடவடிக்கையின் கீழ் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் draft வாக்காளர் பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இவை இறுதி மற்றும் நிரந்தரமான வாக்காளர் நீக்கங்கள் எனக் கருத முடியாது; தகுதி மற்றும் ஆவணங்கள் தொடர்பான சரிபார்ப்பு, மேல்முறையீடு உள்ளிட்ட நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் நீக்க விவகாரம்!
மேற்கு வங்கத்தில் SIR நடவடிக்கையின் போது வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. அங்கு 27.16 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்களில் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது பெயர்களை மீண்டும் சேர்க்கக் கோரி மேல்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பின்னர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான தீர்ப்பாயங்கள் மூலம் மேல்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
வாக்காளர் தரவுத்தள கட்டுப்பாடு குறித்த கேள்விகள்!
வாக்காளர் பட்டியல் தொடர்பான மென்பொருள் மற்றும் தரவுத்தள அணுகல் மையப்படுத்தப்படுவது குறித்தும் தேர்தல் ஆணையர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகளின் அணுகல் மற்றும் அதிகாரங்கள் குறைக்கப்படுகிறதா என்பது குறித்து சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கவலை தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை கூறுகிறது. வாக்காளர் தரவுத்தளத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரம் சட்டப்படி உரிய அதிகாரிகளிடமே இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் 97 வாக்காளர்கள் தொடர்பான மென்பொருள் பிரச்சினை!
கோவாவில் தகுதியுடைய 97 வாக்காளர்களின் பெயர்களை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாத அளவுக்கு மென்பொருள் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற தொழில்நுட்ப மற்றும் நிர்வாக சிக்கல்கள் வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் விளக்கம்!
இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், ஒரு நிறுவனத்தின் உள் ஆலோசனை நடைமுறையில் மாறுபட்ட கருத்துகள் மற்றும் குறிப்புகள் இருப்பது இயல்பானது என தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் தேர்தல் ஆணையம் எடுத்த அனைத்து முடிவுகளும் முழு ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளாகவே இருந்ததாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதனால், தேர்தல் ஆணையத்துக்குள் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த 14 மாறுபட்ட கருத்துகள், வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர் சேர்ப்பு, பெயர் நீக்கம் மற்றும் தேர்தல் தரவுத்தளத்தின் நிர்வாகம் தொடர்பான விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
வாக்காளர் பட்டியல் தொடர்பான நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டும், தகுதியான ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் பாதுகாக்கப்படும் வகையிலும் நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து எழுந்து வருகிறது.
