ரஷியாவின் சைபீரியா பகுதியில் உள்ள பிளேக் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய 28 வயது பெண் ஆய்வாளர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு பிளேக் நோய் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஷெலெகோவ் நகரில் செயல்படும் ஆன்டி-பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில் டாரியா ஷிபிலோவா என்ற ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் பணியாற்றி வந்தார். அவர் கடுமையான நிமோனியா அறிகுறிகளுடன் செப்டம்பர் 29-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உடைந்த சோதனைக் குழாயால் அச்சம்
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, ஆய்வுப் பணியின்போது பிளேக் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா அடங்கிய சோதனைக் குழாய் உடைந்ததாகவும், அதன்மூலம் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவலை ரஷிய சுகாதார அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ரஷியாவின் பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பான Rospotrebnadzor, அவர் “காரணம் தெரியாத நிமோனியா”வால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரது உடலில் பணியுடன் தொடர்புடைய நுண்ணுயிரிகள் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
200-க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில்
உயிரிழந்த ஆய்வாளருடன் தொடர்பில் இருந்திருக்கக்கூடிய சுமார் 200 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை யாருக்கும் நோய் அறிகுறிகள் தென்படவில்லை என்றும், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் எதிர்மறையாக வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
5 மருத்துவமனைகளில் கட்டுப்பாடுகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் பல மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 5 மருத்துவமனைகள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனைகளில் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக நோயாளிகள் சேர்க்கை மற்றும் வெளியேற்றம் உள்ளிட்ட செயல்பாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பிளேக் பரவல் உறுதி செய்யப்பட்டதா?
இதுவரை ரஷிய சுகாதார அதிகாரிகள் நாட்டில் பிளேக் நோய் பரவல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. உயிரிழந்த ஆய்வாளரின் மரணத்திற்கும் பிளேக் நோய்க்கும் நேரடி தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்படவில்லை.
அதேநேரத்தில், நிமோனிக் பிளேக் என்ற நோய் ஏற்பட்டிருந்தால் அது சுவாசத் துளிகள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது என்பதால், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரஷிய சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மற்றும் தொடர்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலையில், இது உறுதி செய்யப்பட்ட பிளேக் பரவல் அல்ல என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் இந்திய மருந்து நிறுவன ஆலை மீது ரஷியா தாக்குதல்: ஒருவர் பலி!
