ரஷியா-உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனில் இந்திய வேர்களைக் கொண்ட மருந்து நிறுவனத்தின் ஆலை மீது ரஷிய டிரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. சுமி நகரில் உள்ள குசும் குழுமத்தின் மருந்து ஆலையை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.


இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். ஆலையின் பிரதான கட்டமைப்பு கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.400 கோடி வரை சேதம்?
ரஷிய டிரோன் தாக்குதலால் ஆலையின் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுமார் ரூ.400 கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வந்த போதிலும் செயல்பட்டு வந்த இந்த ஆலை, தற்போதைய தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வேர்களைக் கொண்ட குசும் குழுமம்
குசும் குழுமம் 1994-ம் ஆண்டு இந்திய மருந்துகளை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யும் விநியோக நிறுவனமாக தனது செயல்பாட்டை தொடங்கியது. பின்னர் சொந்த மருந்து பிராண்டுகளை உருவாக்கி, உற்பத்தித் துறையிலும் கால் பதித்தது.
இந்த நிறுவனத்தை இந்தியரான ராஜீவ் குப்தா நடத்தி வருகிறார். இந்தியாவில் 2007-ம் ஆண்டு உற்பத்தி ஆலையை தொடங்கிய குசும் குழுமம், 2009-ம் ஆண்டு உக்ரைனின் சுமி நகரிலும் ஆலையை அமைத்தது.
50-க்கும் மேற்பட்ட மருந்துகள் உற்பத்தி
குசும் குழுமம் 50-க்கும் மேற்பட்ட மருந்துகளை, குறிப்பாக ஜெனரிக் மருந்துகளை தயாரித்து வருகிறது. உக்ரைன், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
சுமி ஆலை மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல், உக்ரைனில் செயல்பட்டு வரும் இந்திய வேர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கும் போரின் தாக்கம் தொடர்வதை வெளிப்படுத்தியுள்ளது.
தொடரும் ரஷிய டிரோன் தாக்குதல்கள்
சுமி உள்ளிட்ட உக்ரைனின் பல பகுதிகளில் ரஷியா தொடர்ந்து டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீபத்திய தாக்குதல்களில் ஷாஹெட் வகை டிரோன்களும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, சுமியில் உள்ள மருந்து நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்ததுடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரான் எண்ணெய் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: இடைக்கால அமைச்சராக ஹமீத் போவார்டு நியமனம்!
