Homeசெய்திகள்இந்தியா2006 வழக்கை தூசிதட்டிய கேரள அரசு: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு நெருக்கடி!

2006 வழக்கை தூசிதட்டிய கேரள அரசு: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு நெருக்கடி!

-

- Advertisement -

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது 2006-ம் ஆண்டு கேரளாவில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

கேரளாவில் ஞானேஷ் குமார் பொதுப்பணித்துறை செயலாளராக பணியாற்றியபோது, கேரள மாநில போக்குவரத்து திட்டத்தின் (KSTP) கீழ் நடைபெற்ற சாலை மேம்பாட்டுப் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டிருந்தது.

மலேசிய பொறியாளர் தற்கொலை

இந்த சாலை திட்டத்தில் PATI-BEL என்ற இந்தோ-மலேசிய கூட்டு நிறுவனத்தின் சார்பில் பணியாற்றிய மலேசியாவைச் சேர்ந்த சிவில் பொறியாளர் லீ சீ பின், 2006-ம் ஆண்டு கோலாலம்பூரில் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலைக்கு முன்பு எழுதியதாக கூறப்படும் 2 குறிப்புகளில் ஞானேஷ் குமாரின் பெயர் இடம்பெற்றிருந்ததாகவும், ஊழல் மற்றும் பணம் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதற்கட்ட விசாரணை முடக்கப்பட்டதாக புகார்

2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை பின்னர் எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை வெளிப்புற அழுத்தம் காரணமாக பாதியிலேயே முடக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மலையின்கீழ் வேணுகோபால் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை பரிசீலித்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, முதலமைச்சர் வி.டி. சதீசனுடன் ஆலோசனை நடத்திய பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மனோஜ் ஆபிரகாமுக்கு விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

“தற்போதைய பதவி விசாரணைக்கு தடையில்லை”

ஞானேஷ் குமார் தற்போது தலைமை தேர்தல் ஆணையராக இருந்தாலும், குற்றச்சாட்டுகள் அவர் 2006-ம் ஆண்டு கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த காலத்தைச் சேர்ந்தவை என்பதால், அவரது தற்போதைய பதவி விசாரணைக்கு சட்டரீதியான தடையாக இருக்காது என கேரள உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், 20 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எனினும், ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. தற்போது உத்தரவிடப்பட்டுள்ள விசாரணையின் முடிவிலேயே உண்மை நிலை தெரியவரும்.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு 150 நாட்கள்: உண்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

MUST READ