கேரள மாநிலம் கொச்சியில், மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தேநீர் அருந்தச் சென்ற இளைஞர்கள்
கொச்சியில் உள்ள கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்த தேவிகா (21), கோபிகா (22), இஜாஸ் (21) ஆகிய மூவரும், நள்ளிரவில் தேநீர் அருந்துவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். தேநீர் அருந்திவிட்டு தங்களது இருப்பிடத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, நெடும்பாசேரி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அவர்களது மோட்டார் சைக்கிள் மீது, அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியது.
சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழப்பு
கார் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி தேவிகா, கோபிகா, இஜாஸ் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
மது போதையில் கார் ஓட்டியதாகக் குற்றச்சாட்டு
விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சுஹைல் சஜீவ் (19) என்ற இளைஞரை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் மது போதையில் அதிவேகமாகக் காரை ஓட்டியதாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபத்தில் இளம் வயதுடைய மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது ஓட்டுநரின் உயிருக்கு மட்டுமின்றி, சாலையில் பயணிக்கும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
பினராயி விஜயன் மீது ஊழல் வழக்குப்பதிவு! மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் மீதும் நடவடிக்கை
