செல்போனில் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வரும்போது, அந்த எண்ணின் உரிமையாளர் யார் என்பதை அறிந்துகொள்ள உதவும் புதிய விதியை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, 2026 நவம்பர் 1 முதல் 4G மற்றும் அதற்கு மேம்பட்ட நெட்வொர்க்குகளில், அழைப்பவரின் பெயரையும் மொபைல் எண்ணையும் திரையில் காட்டும் Calling Name Presentation (CNAP) வசதியை நடைமுறைப்படுத்த தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது.


என்ன மாற்றம் வரப்போகிறது?
இதுவரை மொபைலில் சேமிக்கப்படாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், பெரும்பாலும் அந்த எண்ணை மட்டுமே பார்க்க முடியும். புதிய CNAP வசதி நடைமுறைக்கு வந்ததும், அழைப்பவரின் எண்ணுடன் அவரது பெயரும் திரையில் காட்டப்படும்.
இந்தப் பெயர், அழைப்பவரின் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சந்தாதாரர் பதிவுகளில் உள்ள தகவல்களின் அடிப்படையில் காட்டப்படும். இதனால் தெரியாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காண்பது எளிதாகலாம்.
பெயர் எப்படி காட்டப்படும்?
மொபைல் எண்ணை நீங்கள் ஏற்கெனவே உங்கள் தொடர்புகள் பட்டியலில் சேமித்திருந்தால், அதில் உள்ள பெயரே திரையில் தெரியும். அந்த எண் சேமிக்கப்படவில்லை என்றால், உள்நாட்டு அழைப்புகளுக்கு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பதிவில் உள்ள பெயர் காட்டப்படும்.
வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகளுக்கு, எண் உங்கள் தொடர்புகள் பட்டியலில் சேமிக்கப்படாத நிலையில், அழைப்பவரின் பெயருக்குப் பதிலாக “International Call” எனக் காட்டப்படும்.
தனியாகச் செயலியைப் பதிவிறக்க வேண்டுமா?
இல்லை. இந்த வசதியைப் பயன்படுத்த Truecaller போன்ற மூன்றாம் தரப்பு செயலியைத் தனியாகப் பதிவிறக்க வேண்டிய அவசியமில்லை. 4G மற்றும் அதற்கு மேம்பட்ட வயர்லெஸ் நெட்வொர்க்குகளில் இந்தச் சேவையை இயல்பாகச் செயல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2G, 3G நெட்வொர்க்குகள் மற்றும் லேண்ட்லைன் இணைப்புகளுக்கு இந்த வசதியை விரிவுபடுத்துவது குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியுரிமைக்கு என்ன பாதுகாப்பு?
அழைப்பவரின் பெயர் தொடர்பான தகவல்கள் அழைப்பு முடிந்த பிறகு சேமித்து வைக்கப்படாத வகையில், பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள விதிகளின்படி Calling Line Identification Restriction (CLIR) எனப்படும் அழைப்பாளர் அடையாளத்தைக் கட்டுப்படுத்தும் வசதியைப் பெற்றவர்களின் பெயர் காட்டப்படாது. சேவை தொடர்பான புகார்களைப் பெறவும் தீர்வு வழங்கவும் நிறுவனங்கள் குறைதீர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
நிறுவனங்களின் பெயரைக் காட்ட முடியுமா?
வணிகம் மற்றும் அதிக எண்ணிக்கையிலான இணைப்புகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சந்தாதாரர் பதிவில் உள்ள பெயருக்குப் பதிலாகத் தங்களது அங்கீகரிக்கப்பட்ட வணிகப் பெயரைக் காட்டும் வசதியைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கலாம்.
இதற்காக, அந்தப் பெயர் உரிய வர்த்தக முத்திரையாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது GST இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட வணிகப் பெயராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே பெயரை மாற்ற அனுமதிக்கப்படும்.
ஸ்பேம் அழைப்புகள் முற்றிலும் நின்றுவிடுமா?
புதிய வசதி, அழைப்பவரின் அடையாளத்தை அறிந்துகொள்ள உதவும் என்றாலும், இதனால் ஸ்பேம் அழைப்புகளும் மோசடி அழைப்புகளும் முற்றிலும் நின்றுவிடும் என்று உறுதியாகக் கூற முடியாது. திரையில் காட்டப்படும் பெயர் மற்றும் எண்ணைக் கவனித்து, சந்தேகத்திற்குரிய அழைப்புகளிடம் தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது OTP ஆகியவற்றைப் பகிராமல் இருப்பது அவசியம்.
நவம்பர் 1 முதல் இந்த வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ள நிலையில், மொபைல் பயனர்கள் இனி அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காண கூடுதல் தகவலைப் பெற முடியும்.
