கோவை மாவட்டத்தில் புதிதாகப் புனரமைக்கப்பட்டுள்ள சாடிவயல் யானைகள் முகாம், சூழல் சுற்றுலாத் தளமாகப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில் யானைகளைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், கோவை மக்களிடையே இந்தப் புதிய சுற்றுலாத் தளம் கவனம் ஈர்த்துள்ளது.

ரூ.8 கோடியில் புனரமைக்கப்பட்ட யானைகள் முகாம்
கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சாடிவயல் பகுதியில் ஏற்கெனவே தற்காலிக யானைகள் முகாம் செயல்பட்டு வந்தது. இதனைப் புனரமைத்து, பொதுமக்கள் பார்வையிடும் வகையிலான சூழல் சுற்றுலாத் தளமாக மாற்றத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
இதற்காக கடந்த 2023ஆம் ஆண்டு ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 20 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முகாமில், யானைகள் தங்குவதற்காக 20 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், யானைகள் குளிப்பதற்காக ஐந்து ஷவர்கள், மூன்று நீச்சல் குளங்கள், உணவு தயாரிப்பதற்கான சமையலறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
யானைகளின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
யானைகள் பாதுகாப்புக்கு சிறப்பு ஏற்பாடுகள்
வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த முகாமைச் சுற்றி சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காகக் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் யானைகளைப் பார்வையிடுவதற்காகப் பால்கனியுடன் கூடிய பார்வையாளர் கேலரியும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யானைகளை நெருங்கிச் செல்லாமல், குறிப்பிட்ட பாதுகாப்பான இடத்திலிருந்து அவற்றைக் கண்டு ரசிக்க முடியும்.
மேலும், முதுமலை முகாமிலிருந்து இரண்டு கும்கி யானைகளும், டாப்ஸ்லிப் முகாமிலிருந்து இரண்டு கும்கி யானைகளும் என மொத்தம் நான்கு யானைகள் சாடிவயல் முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளன.
பெரியவர்களுக்கு ரூ.30; குழந்தைகளுக்கு ரூ.20 கட்டணம்
சாடிவயல் யானைகள் முகாம் சூழல் சுற்றுலாத் தளமாகப் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ள நிலையில், பார்வையாளர்களுக்கான நுழைவுக் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரியவர்களுக்கு ரூ.30
குழந்தைகளுக்கு ரூ.20
சாடிவயல் நுழைவுவாயிலில் டிக்கெட் பெற்றுக்கொண்டு முகாமுக்குள் சென்று யானைகளைப் பார்வையிடலாம்.
தொடக்க நாளில் 120 பேர் முகாமுக்கு வருகை தந்த நிலையில், இரண்டாவது நாளில் 200-க்கும் மேற்பட்டோர் வருகை தந்து யானைகளைக் கண்டு ரசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்திலேயே பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கூடுதல் பார்வையாளர் கேலரிகள் அமைப்பது மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கக் கோரிக்கை
சாடிவயல் யானைகள் முகாமுக்கு வருகை தந்த பொதுமக்கள், கோவையிலேயே யானைகளைக் காணும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைக் காண முதுமலை அல்லது டாப்ஸ்லிப் போன்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டியிருந்ததாகவும், தற்போது கோவை அருகிலேயே இத்தகைய சுற்றுலாத் தளம் உருவாகியிருப்பது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட உதவுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அதே நேரத்தில், டிக்கெட் கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கூகுள் பே (GPay) மூலம் மட்டுமே கட்டணம் செலுத்தும் வசதி இருப்பதாகவும், இணைய இணைப்பு அல்லது மொபைல் நெட்வொர்க் சரியாகக் கிடைக்காத நேரங்களில் டிக்கெட் பெறுவதில் சிரமம் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, ரொக்கப் பணம் செலுத்தும் வசதி உள்ளிட்ட மாற்று கட்டண முறைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோவை குற்றாலத்துடன் இணைந்து புதிய சுற்றுலா அனுபவம்
கோவை குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், அருகிலுள்ள சாடிவயல் யானைகள் முகாமுக்கும் சென்று பார்வையிடுவதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாகத் தொடர் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு இந்த முகாம் கூடுதல் வாய்ப்பை வழங்குகிறது.
செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட புதிய பொழுதுபோக்கு இடங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சாடிவயல் யானைகள் முகாமும் கோவையின் சுற்றுலா வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும்
இயற்கைச் சூழலில் யானைகளைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பை வழங்கும் சாடிவயல் முகாம், கோவை மக்களுக்கும் வெளி மாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் புதிய சுற்றுலா அனுபவத்தை அளிக்கிறது.
அதேவேளையில், அதிகரிக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப டிக்கெட் விநியோக வசதிகள், கட்டணச் செலுத்தும் முறைகள், பார்வையாளர் கேலரிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துவது அவசியமாகிறது.
இந்த வசதிகள் மேம்படுத்தப்பட்டால், சாடிவயல் யானைகள் முகாம் கோவை மாவட்டத்தின் முக்கியமான சூழல் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக வளர வாய்ப்புள்ளது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா: காளி வேடம், அம்மன் வேடமிட்டு வழிபட்ட பக்தர்கள்!
