பூவிருந்தவல்லி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நசரத்பேட்டை சர்வீஸ் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


தொடர்ந்து பெய்த மழையால் சர்வீஸ் சாலையில் முழங்கால் அளவுக்கு மழை வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் அந்தச் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
தேங்கிய மழைநீரில் செல்லும் இருசக்கர வாகனங்கள் பழுதாகி நடுவழியில் நின்றுவிடுவதால், வாகன ஓட்டிகள் அவற்றைத் தள்ளிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

நெடுஞ்சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் நிரம்பி வழிவதே சாலையில் வெள்ளநீர் தேங்குவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் மழைநீர் முறையாக வெளியேற முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.
எனவே, நசரத்பேட்டை சர்வீஸ் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், வடிகால் கால்வாய்களைச் சீரமைத்து மழைநீர் தடையின்றி வெளியேறவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
