வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆந்திரப் பிரதேச கடற்கரையில் நாளை (அக்டோபர் 28) கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும்
வங்கக்கடலின் மத்திய மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளுக்கு இடையே, பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையில் நாளை முற்பகலில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 140 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை
அர்னாப் புயலின் தாக்கத்தால் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களிலும், தெற்கு ஒடிசாவின் சில பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் சீற்றமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
புயலை எதிர்கொள்ளும் வகையில் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பாதிப்புக்குள்ளாகக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், மீட்புப் பணிகளுக்கான குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்றைக் கருத்தில் கொண்டு, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடற்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் அரசு மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
அர்னாப் புயல் எச்சரிக்கை: ஆந்திர அரசு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு – 15 NDRF குழுக்கள் தயார்!
