
தமிழ் திரையுலகிலும் சின்னத்திரையிலும் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த பழம்பெரும் மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் (93) வயது மூப்பு காரணமாக காலமானார்.
1979-ஆம் ஆண்டு மேடை நாடகக் கலைஞராகத் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய வத்சலா ராஜகோபால், சுமார் 25 ஆண்டுகளில் 450-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். நாடகங்களைத் தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அத்திரைப்படத்தில் கதாநாயகி ரோஜாவின் பாட்டியாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை வத்சலா.. தொடர்ந்து சதிலீலாவதி (அம்புஜம் மாமி), ரிதம் (நாயகனின் தாய்), அந்நியன், மொழி, வின்னர், கல்யாண சமையல் சாதம் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் பாட்டி, தாய் போன்ற முதன்மையான குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.


வெள்ளித்திரை மட்டுமின்றி 1990-களின் தொடக்கத்தில் இருந்தே தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கத் தொடங்கினார். சித்தி (அம்புஜம் மாமி), காதல் பகடை, ஆனந்தம், மை டியர் பூதம், வசந்தம், மகள் மற்றும் முந்தானை முடிச்சு உள்ளிட்ட பல்வேறு முன்னணி மெகா தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் அன்பைப் பெற்றார்.
இயல்பான நகைச்சுவை உணர்வும், எதார்த்தமான பாசமும் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த வத்சலா ராஜகோபால் இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவுக்குத் தமிழ் திரையுலகினரும், சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
