விண்வெளிப் பயணங்களுக்கான செலவைக் குறைத்து, செயற்கைக்கோள்களை அடிக்கடி விண்ணில் செலுத்தும் நோக்கில், ராக்கெட்டின் முக்கியப் பாகமான மூக்கு கூம்பை (Rocket Fairing) மரத்தால் தயாரித்து சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.


ஜியாங்சு நிறுவனத்தின் புதுமையான முயற்சி
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘லைட் இயர் எக்ஸ்ப்ளோரர்’ (Light Year Explorer) என்ற தனியார் விண்வெளி நிறுவனம் இந்தப் புதிய வடிவமைப்பை உருவாக்கியுள்ளது.
ராக்கெட்டின் முன்பகுதியில் பொருத்தப்படும் செயற்கைக்கோள் பாதுகாப்பு மூக்கு கூம்பின் வெளிப்புறத்தை ப்ளைவுட் மரத்தால் தயாரித்துள்ளது. இந்தப் புதிய வடிவமைப்பு குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டது.
4.2 மீட்டர் விட்டம் கொண்ட மரக் கட்டமைப்பு
பொதுவாக ராக்கெட்டின் மூக்கு கூம்புகள் அலுமினியம் அல்லது விலையுயர்ந்த கலப்புப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், சீன நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய வடிவமைப்பில் குறைந்த அடர்த்தி கொண்ட ப்ளைவுட் பலகைகள் வெளிப்புறக் கட்டமைப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 4.2 மீட்டர் விட்டம் கொண்ட இந்தக் கூம்பின் உள்பகுதியில் உறுதியான உலோகச் சட்டகம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்போது ஏற்படும் அழுத்தங்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எடை, உறுதித்தன்மை, ரேடியோ அலைகள் ஊடுருவும் தன்மை மற்றும் சத்தத்தைக் கட்டுப்படுத்தும் திறன் ஆகியவற்றில் வழக்கமான கலப்புப் பொருட்களுக்கு இணையான செயல்திறனை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தயாரிப்புச் செலவும் நேரமும் குறையும்
இந்தப் புதிய தொழில்நுட்பம் மூலம் ராக்கெட்டின் மூக்கு கூம்புகளைத் தயாரிப்பதற்கான செலவையும் உற்பத்தி நேரத்தையும் கணிசமாகக் குறைக்க முடியும் என்று நிறுவனம் நம்புகிறது.
குறிப்பாக, ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டங்களுக்கும், பெரிய செயற்கைக்கோள்களை அடிக்கடி ஏவும் திட்டங்களுக்கும் இந்தக் கட்டமைப்பு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளிக் குப்பைகளைக் குறைக்கவும் வாய்ப்பு
ராக்கெட் விண்ணில் பறந்த பிறகு, குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் அதன் மூக்கு கூம்பு தனியாகப் பிரிந்து பூமியை நோக்கித் திரும்பும். அப்போது மரத்தால் உருவாக்கப்பட்ட வெளிப்புறப் பகுதி வளிமண்டல உராய்வின்போது எரிந்து சாம்பலாகும் தன்மை கொண்டது.
இதனால் உலோகப் பாகங்கள் மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழையும்போது ஏற்படக்கூடிய சில விண்வெளிக் குப்பைப் பிரச்சினைகளைக் குறைக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சோதனைகளுக்குப் பிறகே பயன்பாட்டுக்கு வரும்
தற்போது இந்த மரக் கட்டமைப்பு வடிவமைப்பு நிலையில் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு பல்வேறு தரச் சோதனைகள் மற்றும் தொழில்நுட்பச் சரிபார்ப்புகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது.
ராக்கெட் ஏவுதலின்போது ஏற்படும் அதிர்வு, வெப்பம், காற்றழுத்தம் மற்றும் ஒலி அழுத்தங்களைத் தாங்கும் திறன் உள்ளிட்டவை சோதிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே, இந்தத் தொழில்நுட்பம் வெற்றிகரமாக விண்வெளிப் பயணத்தில் பயன்படுத்தப்படுமா என்பது அடுத்தகட்டச் சோதனைகளுக்குப் பிறகே தெரியவரும்.
