அமெரிக்காவுடனான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கத்தார் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவுக்கு புதிய அணுசக்தித் திட்டம் தொடர்பான முன்மொழிவை ஈரான் அனுப்பியுள்ளது. அதே நேரத்தில், பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பு அமெரிக்கா 7 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.


ஈரான் போர் பின்னணி
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அப்போதைய ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை கைவிடச் செய்யும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் லெபனானுக்கும் பரவியது. அங்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
மேலும், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
கத்தார் மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் தூது
இதற்கிடையே, அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்குப் பிறகு போர் மீண்டும் தீவிரமடையலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த மத்தியஸ்த நாடுகள் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த சூழலில், கத்தார் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவுக்கு புதிய அணுசக்தித் திட்டம் தொடர்பான முன்மொழிவை ஈரான் அனுப்பியுள்ளது.
ஆனால், பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பு அமெரிக்கா தனது 7 நிபந்தனைகளையும் நிறைவேற்ற வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
இதனை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், பெயர் வெளியிட விரும்பாத மூத்த ஈரானிய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் அனுப்பிய முன்மொழிவை அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும், அதன் முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் விதித்துள்ள 7 நிபந்தனைகள் என்ன?
ஈரான் தனது 7 நிபந்தனைகளையும் அதிகாரப்பூர்வமாக முழுமையாக வெளியிடவில்லை. இருப்பினும், வெளியாகியுள்ள தகவல்களின்படி அந்த நிபந்தனைகள்:
- லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் உள்ளிட்ட அனைத்து போர் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்.
- ஈரான் மீதான தாக்குதல்களை முழுமையாக நிறுத்த வேண்டும்.
- ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை நீக்க வேண்டும்.
- ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்.
- வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை விடுவிக்க வேண்டும்.
- மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பைக் குறைக்க வேண்டும்.
- போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவும் மறுப்பு
இதற்கிடையே, ஈரானின் பாதுகாப்பு அதிகாரி மொஹ்சென் ரெசாய், அமெரிக்கா தனது 7 நிபந்தனைகளையும் நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கப்போவதில்லை என்றும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், எந்தவொரு பேச்சுவார்த்தையும் ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான விவகாரங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இதனால் அமெரிக்கா – ஈரான் இடையேயான ராஜதந்திர பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
“என்னை பதவி நீக்கம் செய்ய முயன்றால் ஜனநாயகக் கட்சியே அழிந்துவிடும்” – டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!
