Homeசெய்திகள்உலகம்துருக்கி இரும்பு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 17 தொழிலாளர்கள் பலி; 13 பேர் காயம் –...

துருக்கி இரும்பு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 17 தொழிலாளர்கள் பலி; 13 பேர் காயம் – 5 பேர் கைது!

-

- Advertisement -

துருக்கி நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள இரும்பு மற்றும் எஃகு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

பராமரிப்புப் பணியின்போது வெடிவிபத்து

துருக்கியின் இஸ்மிர் மாகாணம் அலியாகா பகுதியில் செயல்பட்டு வரும் ஹபாஸ் (HABAS) இரும்பு மற்றும் எஃகு ஆலையில் நவம்பர் 9-ஆம் தேதி நண்பகல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆலையில் கொதிகலனை மாற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மேல்நிலை கிரேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தொழிற்சாலையில் இருந்த உலை மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து ஆலையின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்தது. வானுயரத்திற்கு கரும்புகை எழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

17 பேர் உயிரிழப்பு – 13 பேர் காயம்

இந்த விபத்தில் முதற்கட்டமாக 16 பேர் உயிரிழந்ததாக அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்திருந்தார். மேலும், 13 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணைக்கு உத்தரவு – 5 பேர் கைது

விபத்துக்கான காரணம், பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா, அலட்சியம் ஏதேனும் நடந்துள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நீதித்துறை மற்றும் நிர்வாக ரீதியான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. நான்கு அரசு வழக்கறிஞர்கள் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி

இந்த விபத்தைத் தொடர்ந்து தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பணிச்சூழல் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. விபத்துக்கான உண்மையான காரணம் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கியில் நடைபெற்ற இந்தக் கோர விபத்து தொழிலாளர்களின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

எகிப்தில் இரண்டு பயணிகள் ரெயில்கள் மோதி கோர விபத்து: 7 பேர் பலி; 125 பேர் காயம்!

MUST READ