திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞர்களைக் கவரும் வகையில் சீனாவைச் சேர்ந்த டேட்டிங் செயலி ஒன்று வித்தியாசமான சலுகையை அறிவித்துள்ளது. இந்தச் செயலியில் உறுப்பினராகச் சேர்ந்து, 3 ஆண்டுகளுக்குள் திருமணம் நடைபெறாவிட்டால் செலுத்திய முழு உறுப்பினர் கட்டணத்தையும் திருப்பித் தருவதாக அறிவித்துள்ளது. இந்த நூதன அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.


குறைந்து வரும் திருமண விகிதம்!
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக திருமண விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இளைஞர்களிடையே திருமணம் குறித்த ஆர்வம் குறைந்து வருவதும், வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் பல்வேறு சவால்கள் இருப்பதும் இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இந்தச் சூழலில், தீவிரமாக வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களைக் கவரும் வகையில் ஷென்சென் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட லியாங்பெய் ஏஐ (Liangpei AI) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் புதிய டேட்டிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
3 ஆண்டுகளில் திருமணம் இல்லை என்றால் பணம் திரும்பும்!
இந்தச் செயலியில் உறுப்பினராகச் சேருவதற்கு 2,000 சீன யுவான் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.28,155 ஆகும்.
இந்தச் செயலியில் இணைந்து, 3 ஆண்டுகளுக்குள் திருமணம் நடைபெறாவிட்டால் உறுப்பினர்கள் செலுத்திய முழு 2,000 யுவான் கட்டணத்தையும் திருப்பித் தருவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது.
ஒரே நேரத்தில் ஒருவருடன் மட்டுமே பேச முடியும்!
வழக்கமான டேட்டிங் செயலிகளைப் போல ஒரே நேரத்தில் பலருடன் உரையாடும் வசதி இதில் கிடையாது. மாறாக, ஒரு பயனருக்கு ஒரே நேரத்தில் ஒருவருடன் மட்டுமே தொடர்பு ஏற்படுத்தித் தரப்படும்.
அந்த நபருடனான தொடர்பு முடிவுக்கு வந்த பிறகுதான் அடுத்த நபரைத் தேடும் வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் மேலோட்டமான பழக்கங்களைத் தவிர்த்து, திருமணத்தை நோக்கமாகக் கொண்ட உறவை உருவாக்குவதே நிறுவனத்தின் நோக்கமாகும்.
20 நிமிடங்கள் ஏஐ நேர்காணல்!
இந்தச் செயலியின் மற்றொரு சிறப்பம்சமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. செயலியில் புதிதாக இணையும் பயனர்களிடம் ஏஐ தொழில்நுட்பம் சுமார் 20 நிமிடங்கள் உரையாடும்.
அப்போது அவர்களின் குடும்பப் பின்னணி, எதிர்காலத் திட்டங்கள், வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கைத் துணை குறித்த எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட விவரங்கள் கேட்டறியப்படும். அதன் அடிப்படையில் மிகவும் பொருத்தமான நபரை ஏஐ தொழில்நுட்பம் பரிந்துரைக்கும்.
போலி கணக்குகளைத் தடுக்க கடுமையான சோதனை!
திருமணமானவர்கள் தங்களைத் திருமணமாகாதவர்கள் என்று கூறி செயலியில் இணைவதைத் தடுக்கும் வகையில் கடுமையான சரிபார்ப்பு நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, பயனர்கள் தங்களது உண்மையான பெயர், புகைப்படம் மற்றும் திருமணமாகாதவர் என்பதற்கான சான்றுகளைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2029-ல் தான் முதல் பணம் திரும்பும் சோதனை!
ஷென்சென் நகரில் திருமணப் பதிவுசெய்த 150 தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் திட்டத்தை நிறுவனத்தின் நிறுவனர் ஜெங் சின்சுன் வடிவமைத்துள்ளார்.
கடந்த 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்தச் செயலி, தற்போது சீனாவின் 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் பயன்பாட்டில் உள்ளது.
இந்தச் செயலியின் மூன்று ஆண்டு பணம் திரும்பப் பெறும் உத்தரவாதம், 2029-ம் ஆண்டு ஜூலை மாதத்தில்தான் முதன்முதலில் சோதிக்கப்பட உள்ளது.
திருமணத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்த வித்தியாசமான டேட்டிங் செயலி, சீன இளைஞர்களிடையே கவனத்தையும் சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
