தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நாளை (நவம்பர் 16) டெல்லி செல்ல உள்ளார். இந்தப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகேதாது அணைத் திட்டத்திற்கு தமிழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்வது இந்தச் சந்திப்பின் முக்கிய அம்சமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேகேதாட்டு அணை விவகாரம் முக்கியம்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாது அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தின் காவிரி நீர் உரிமை பாதிக்கப்படலாம் என தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, கடந்த நவம்பர் 7-ம் தேதி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், இந்த விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை நேரடியாக எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா
இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் ‘Belonging: A Journey of Love’ என்ற நினைவுக்குறிப்பு நூலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா டெல்லியில் நாளை நடைபெறுகிறது.
இந்த விழாவில் முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மூன்றாவது டெல்லி பயணம்
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் மூன்றாவது டெல்லி பயணம் இதுவாகும். ஏற்கெனவே மே 27-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்து தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
தொடர்ந்து ஜூன் மாதத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்திருந்தார்.
