சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் (எஸ்ஐடி) சுமார் 8 மணி நேரம் நடத்திய சோதனை நிறைவடைந்தது.

சோதனையில் எவ்விதப் பொருள்களும் கைப்பற்றப்படவில்லை எனக் குறிப்பிட்ட ஆவணத்தை, அவரது குடும்பத்தினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் ஜெம் வீரமணி மீது 8 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், ஓட்டுநர் உள்ளிட்ட 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அக்டோபர் 1-ம் தேதி ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பின்னர் மூவரும் தமிழ்நாடு அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜேசிபி மூலம் தோண்டி ஆய்வு
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின் அடிப்படையில், ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள நீச்சல் குளப் பகுதியில் எஸ்ஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அந்தப் பகுதியில் உடல்கள் அல்லது முக்கிய ஆவணங்கள் புதைக்கப்பட்டுள்ளனவா என்ற கோணத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி ஆய்வு நடத்தப்பட்டது. காலை 10.30 மணிக்குத் தொடங்கிய சோதனை மாலை 6.25 மணி வரை நடைபெற்றது. சுமார் 30-க்கும் மேற்பட்ட எஸ்ஐடி அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இதில் ஈடுபட்டனர்.
சோதனை நிறைவடைந்ததும், எதுவும் கைப்பற்றப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்ட ஆவணத்தை அதிகாரிகள் குடும்பத்தினரிடம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
மனைவியின் கையை முறுக்கியதாக புகார்
இதற்கிடையே, சோதனை நடவடிக்கை குறித்து ஜெம் வீரமணியின் வழக்கறிஞர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எவ்வித முன்னறிவிப்பும் அளிக்காமல் எஸ்ஐடி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தினர். அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு குடும்பத்தினர் எந்தவித இடையூறும் ஏற்படுத்தவில்லை.
சோதனையின்போது ஜெம் வீரமணியின் மனைவி அதிகாரிகளின் நடவடிக்கைகளை கைப்பேசியில் வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது ஆறு அதிகாரிகள் இணைந்து அவரது கையைப் பிடித்து முறுக்கியதாகவும், இதனால் மணிக்கட்டில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜேசிபி இயந்திரம் மூலம் பல இடங்களில் தோண்டிப் பார்த்தும் எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை. சோதனை நடவடிக்கையால் அந்தப் பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது.
காலையில் சோதனை நடத்த வந்த அதிகாரிகள் மாலையில்தான் நோட்டீஸ் வழங்கியது ஏன்? சோதனைக்கு முன்பாகவே முன்னறிவிப்பு அளிக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
எஸ்ஐடி தரப்பில் தெரிவிக்கப்படும் அனைத்தும் உண்மையாகிவிடாது. சோதனையின்போது சட்டவிரோத நடவடிக்கைகள் ஏதேனும் நடைபெற்றிருந்தால், அது தொடர்பாக நீதிமன்றத்தை நாடி முறையிடுவோம் என்றும் வழக்கறிஞர் விக்னேஷ் தெரிவித்தார்.
ஜெம் வீரமணியின் வீட்டில் நடைபெற்ற நீண்ட நேர சோதனையும், அதனைத் தொடர்ந்து அவரது வழக்கறிஞர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளும் இந்த வழக்கில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
