தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பல மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படாமல் இருப்பதாக எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. நிலுவையில் உள்ள உதவித்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அச. உமர் பாரூக் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உதவித்தொகை கிடைக்காமல் நிதி நெருக்கடியில் மாணவர்கள்!
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலச் சென்றுள்ள தமிழக மாணவர்கள், அரசின் உதவித்தொகை உரிய நேரத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
ஆனால், அதிகாரிகளின் மெத்தனப் போக்கு, நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் நீண்டகாலச் சரிபார்ப்பு போன்ற காரணங்களால் உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் கல்விக் கட்டணம் மற்றும் தங்குமிட வாடகை செலுத்த முடியாமல் சிரமப்படுவதுடன், சிலர் தங்கியிருக்கும் இடங்களிலிருந்து வெளியேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
365 மாணவர்கள் தேர்வு: 65 பேருக்கு மட்டுமே நிதி!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, 2026-27 கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் 365 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 164 மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர்.
ஆனால், வெறும் 65 மாணவர்களுக்கு மட்டுமே ரூ.19.53 கோடி உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள மாணவர்களின் உயர்கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெற்றோர்கள்!
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக, தமிழகத்தில் உள்ள அவர்களது பெற்றோர்கள் தங்களின் சேமிப்புகளைச் செலவழித்தும், வீட்டிலுள்ள தங்க நகைகளை அடகு வைத்தும், அதிக வட்டிக்குக் கடன் வாங்கியும் செலவுகளைச் சமாளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
விளிம்புநிலை சமூக மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தில் உதவித்தொகை வழங்குவதில் ஏற்படும் தாமதம், திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே பாதிப்பதாக அச. உமர் பாரூக் தெரிவித்துள்ளார்.
நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரிக்கை!
சமூக நீதி குறித்து பேசும் தமிழக அரசு, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் உயர்கல்வி விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
எனவே, தமிழக அரசும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, உதவித்தொகை நிலுவையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் உரிய நிதியை எவ்விதத் தாமதமுமின்றி விடுவிக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாநிலத் தலைவர் அச. உமர் பாரூக் வலியுறுத்தியுள்ளார்.
மாடு,ஆடு பலி உச்ச நீதிமன்ற இடைக்கால தடை: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி முக்கிய கோரிக்கை!
