Homeசெய்திகள்தமிழ்நாடுபோதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால் காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்! – தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால் காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்! – தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

-

- Advertisement -

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) எச்சரிக்கை விடுத்துள்ளார். போதைப்பொருள் உட்கொண்டதால் உயிரிழப்பு ஏற்பட்டாலும், மத்திய விசாரணை அமைப்புகள் போதைப்பொருட்களைக் கைப்பற்றினாலும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய விசாரணை அமைப்புகள் அடுத்தடுத்து பறிமுதல்

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகை மாவட்டத்தில் 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், சென்னை எம்கேபி நகர் இந்திரா நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ சூடோஎபிட்ரின் என்ற மூலப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் அடுத்தடுத்து மத்திய விசாரணை அமைப்புகள் போதைப்பொருட்களைக் கைப்பற்றி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மாநில காவல்துறையின் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, மாவட்ட காவல் நிர்வாகம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புப் படை ஆகியவை இருந்தும் இதுபோன்ற சம்பவங்களைக் கண்டறியத் தவறியது ஏன் என்ற கேள்வி எழுந்தது.

காவல் ஆய்வாளர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை

இதையடுத்து, கடந்த 10ஆம் தேதி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் நடைபெற்ற வாராந்திர சட்டம் – ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இதுதொடர்பாக டிஜிபி வெளியிட்ட சுற்றறிக்கையில், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் உட்கொண்டதால் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மத்திய விசாரணை அமைப்புகள் ஏதேனும் ஒரு பகுதியில் போதைப்பொருட்களைக் கைப்பற்றினாலும், அந்தப் பகுதியின் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரியான எஸ்.எச்.ஓ. பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டும் காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த உத்தரவு

குற்றங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து காவல் பிரிவு அதிகாரிகள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி) மற்றும் காவல் ஆய்வாளர்கள் பொதுமக்கள் பார்வையில் தெரியும் வகையில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

மாநில அளவிலான நடவடிக்கைகளுடன், மண்டல மற்றும் மாவட்ட அளவிலும் சிறப்பு அதிரடி சோதனைகள், தேடுதல் வேட்டைகளைத் திட்டமிட்டு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த செயலாக்க அறிக்கையை அனைத்து காவல் பிரிவு அதிகாரிகளும் காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தும் வகையில் டிஜிபி பிறப்பித்துள்ள இந்த உத்தரவு காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்புப் படை தயார்! தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

MUST READ