Homeசெய்திகள்தமிழ்நாடுமேகதாது அணை விவகாரம்: டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – முதல்வர்...

மேகதாது அணை விவகாரம்: டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

-

- Advertisement -

கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும், அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை என்றும் தொடர்ந்து பேசி வருவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக – கர்நாடக மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தும் வகையில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இவ்வாறு பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காவிரி உரிமைக்காக அதிமுக அரசு நடத்திய சட்டப் போராட்டம்!

காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காகப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் வழியில் அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இதன் விளைவாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் காவிரி பிரச்சினையில் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டு, கர்நாடக அரசு ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவும் நிர்ணயிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பன்மாநில நதிகள் தேசிய சொத்து என்றும், எந்த ஒரு மாநிலமும் தனிப்பட்ட உரிமை கோர முடியாது என்றும் 1991-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து, காவிரி தீர்ப்பிலும் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேல்படுகை மாநிலங்கள் எவ்விதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக காங்கிரஸ் அரசு மதிப்பதில்லை என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆறு மாதங்களாக தமிழகத்திற்குரிய பங்கு நீரைத் திறந்துவிடப் பிறப்பிக்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு மேகதாதுவில் அணை அவசியம் என்பது போல் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பொதுவெளியில் பேசி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

கர்நாடக அணைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு வெளியேற்றப்படும் வெள்ள உபரிநீரும், கர்நாடக – தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் பெய்யும் மழைநீரும்தான் தற்போது மேட்டூர் அணைக்கு வந்து சேருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக அணைகளில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்குரிய நீர் திறந்துவிடப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்திற்கு வரும் மழைநீர் மற்றும் வெள்ள உபரிநீரையும் தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் தொடர்ந்து பேசி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்டா விவசாயம், 20 மாவட்டங்களின் குடிநீர் பாதிக்கப்படும் அபாயம்!

காவிரி நீர் டெல்டா மாவட்ட விவசாயிகளின் சாகுபடிக்கும், தமிழகத்தின் 20 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரைப் போராடிப் பெறாததால் இந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் அபாயம் ஏற்படுவதுடன், 20 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

நாளை டெல்லி செல்லவுள்ள தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தமிழகத்திற்கு எதிராகப் பொதுவெளியில் பேசி வருவதை எடுத்துரைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு முறையாகப் பின்பற்றவும், காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வப்போது பிறப்பிக்கும் நீர் திறப்பு உத்தரவுகளை நடைமுறைப்படுத்தவும் காங்கிரஸ் தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழப்பு – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

MUST READ