யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணியை அதன் சொந்த மண்ணில் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் ஸ்பெயின் அணி தொடர்ந்து 43 ஆட்டங்களாக தோல்வியடையாமல் இருந்த சாதனைக்கு இங்கிலாந்து முற்றுப்புள்ளி வைத்தது.

மாட்ரிட்டில் நடைபெற்ற லீக் ஏ பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடின.
இங்கிலாந்து அபார வெற்றி
ஆட்டத்தின் முதல் பாதியின் கடைசி நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஹாரி கேன் கோலாக மாற்றி இங்கிலாந்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
இரண்டாவது பாதியில் எஸ்ரி கோன்சா ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து ஜூட் பெல்லிங்ஹாமின் உதவியுடன் பென் வைட் கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 3-0 என முன்னிலை பெற்றது.
இதற்கிடையே, ஸ்பெயின் வீரர் லமின் யமாலை தடுத்ததற்காக இங்கிலாந்து வீரர் எலியட் ஆண்டர்சன் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால் இங்கிலாந்து அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
கிடைத்த பெனால்டி வாய்ப்பை மிக்கேல் ஓயர்சபால் கோலாக மாற்றினார். பின்னர் நிகோ வில்லியம்ஸ் மேலும் ஒரு கோல் அடித்து ஸ்பெயின் அணியின் நம்பிக்கையை அதிகரித்தார். இருப்பினும், கடைசி நேரத்தில் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாகத் தற்காத்து விளையாடி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியைத் தக்கவைத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி குரூப் ஏ3 பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. இரு அணிகளும் தலா 15 புள்ளிகள் பெற்றிருந்தாலும், கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இங்கிலாந்து முதலிடம் பெற்றது.
இத்தாலியை வீழ்த்திய பெல்ஜியம்
மற்றொரு முக்கிய ஆட்டத்தில் பெல்ஜியம் அணி இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் இத்தாலி வீரர் பிரான்செஸ்கோ பியோ எஸ்போசிட்டி கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே பெல்ஜியம் அணி பதிலடி கொடுத்தது. மாக்சிம் டி குய்பர், நாதன் என்கோய் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்தனர். தொடர்ந்து ஜெரமி டோகு சிறப்பான ஆட்டத்தின் மூலம் மேலும் ஒரு கோல் அடித்தார்.
இரண்டாவது பாதியிலும் பெல்ஜியம் அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. டியாகோ மொரேரா 80-வது நிமிடத்தில் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
ஆட்டத்தின் இறுதியில் இத்தாலிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பியோ எஸ்போசிட்டி பயன்படுத்த முயன்றபோது, பெல்ஜியம் கோல் கீப்பர் சென்னே லாம்மென்ஸ் அதைத் தடுத்து அசத்தினார்.
இதன் மூலம் பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நேஷன்ஸ் லீக் காலிறுதிக்கு தகுதி பெற்றது. இத்தாலி அணி காலிறுதி வாய்ப்பை இழந்தது.
பிரான்சும் காலிறுதிக்கு முன்னேற்றம்
மற்றொரு ஆட்டத்தில் துருக்கி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் அணி, தனது பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
இதன் மூலம் பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய அணிகள் 2026-27 நேஷன்ஸ் லீக் தொடரின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்திய செஸ் வரலாற்றில் புதிய சரித்திரம்! 100-வது கிராண்ட்மாஸ்டரானார் அனுஜ் ஸ்ரீவத்ரி!
