உலகம் முழுவதும் வீடியோ கேம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6’ (GTA 6) கேம் வெளியான நாளில் மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுப்பதைத் தடுக்கும் வகையில், இங்கிலாந்தில் உள்ள இரண்டு பள்ளிகள் நூதன அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,600 வரை பரிசு கூப்பன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

GTA 6 வெளியீட்டை முன்னிட்டு சிறப்புப் பரிசு
GTA 6 வீடியோ கேம் நவம்பர் 19-ம் தேதி வெளியானது. இதனை முன்னிட்டு மாணவர்கள் பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுக்கக்கூடும் என்பதால், வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள பெல்பாஸ்ட் பாய்ஸ் மாடல் ஸ்கூல் சிறப்புப் பரிசுக் குலுக்கலை அறிவித்துள்ளது.
அதன்படி, நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களும் தவறாமல் வகுப்புகளுக்கு வருகை தரும் மாணவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு 70 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,600) மதிப்புள்ள பிளேஸ்டேஷன் அல்லது எக்ஸ்பாக்ஸ் பரிசு கூப்பன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வைக் கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் முடிவு
GTA 6 கேம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என்பதால், அந்த விளையாட்டையே நேரடிப் பரிசாக வழங்க முடியாது எனப் பள்ளி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், இந்த வாரத்தில் ஜிசிஎஸ்இ கணிதத் தேர்வுகளும் நடைபெறுவதால், மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்துவதுடன் பள்ளிக்கு வருகை தருவதையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பள்ளி முதல்வர் மேரி மாண்ட்கோமரி தெரிவித்துள்ளார்.
மற்றொரு பள்ளியிலும் பரிசுக் கூப்பன் அறிவிப்பு
இதேபோல், இங்கிலாந்தின் கவுண்டி டர்ஹாம் பகுதியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கத்தோலிக்கப் பள்ளி மற்றும் சிக்ஸ்த் ஃபார்ம் கல்லூரியும் மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி, GTA 6 வெளியான நாளில் முழு நேரமும் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு 65 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,010) மதிப்புள்ள அமேசான் பரிசு கூப்பன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
GTA 6 வெளியீட்டை முன்னிட்டு மாணவர்களின் வருகையை உறுதிப்படுத்த பள்ளிகள் மேற்கொண்டுள்ள இந்த வித்தியாசமான முயற்சிகள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.
