Homeசெய்திகள்உலகம்இந்தியர்களுக்கான விசா இல்லா மலேசியப் பயணம் ரத்து! 2027 ஜனவரி 1 முதல் விசா கட்டாயம்...

இந்தியர்களுக்கான விசா இல்லா மலேசியப் பயணம் ரத்து! 2027 ஜனவரி 1 முதல் விசா கட்டாயம் – புதிய விதிமுறை அறிவிப்பு!

-

- Advertisement -

இந்தியர்கள் மலேசியாவுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய வழங்கப்பட்ட சலுகை 2026 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, 2027 ஜனவரி 1 முதல் மலேசியா செல்லும் இந்தியக் குடிமக்கள் கட்டாயம் விசா பெற்றிருக்க வேண்டும் என்று மலேசிய குடியேற்றத்துறை அறிவித்துள்ளது.

டிசம்பர் 1 முதல் விசா விண்ணப்பம்

இந்தியர்களுக்கான விசா விலக்கு சலுகை 2026 டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று மலேசிய குடியேற்றத்துறை நவம்பர் 17-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2027 ஜனவரி 1 முதல் மலேசியாவுக்குள் நுழையும் இந்தியர்கள் பயணத்திற்கு முன்பாக செல்லுபடியாகும் விசாவைப் பெற வேண்டும். இதற்கான ஆன்லைன் விசா விண்ணப்பங்களை டிசம்பர் 1-ம் தேதி முதல் மலேசியாவின் MyVISA இணையதளம் வழியாகச் சமர்ப்பிக்கலாம்.

30 நாட்கள் விசா இல்லா பயணச் சலுகை

இதுவரை இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் சுற்றுலா, குடும்பப் பயணம், சமூக நிகழ்வுகள் மற்றும் போக்குவரத்து வழிப் பயணம் உள்ளிட்ட காரணங்களுக்காக 30 நாட்கள் வரை விசா இல்லாமல் மலேசியா செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்தச் சலுகை முடிவுக்கு வருவதால், 2027 ஜனவரி முதல் மலேசியா செல்லத் திட்டமிடும் இந்தியர்கள் முன்கூட்டியே விசா பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.

வேலை தேடிச் செல்வது குறித்து எச்சரிக்கை

விசா இல்லா பயணச் சலுகையைப் பயன்படுத்தி மலேசியாவுக்குச் சென்று வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் ஏற்கெனவே இதுகுறித்து இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. சுற்றுலா அனுமதியைப் பயன்படுத்தி வேலை தேடுவதோ அல்லது வேலை செய்வதோ சட்டவிரோதமானது என்றும், முறையான பணி அனுமதி இல்லாமல் வேலைக்குச் சென்றால் குடியேற்றச் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது.

பயணிகள் கவனிக்க வேண்டியவை

மலேசியா செல்லும் இந்தியர்கள் புதிய விதிமுறை நடைமுறைக்கு வரும் தேதியை கவனத்தில் கொண்டு விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விசா விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் அல்லது பயணத் திட்டம் மாற்றப்பட்டாலும் கட்டணம் திரும்ப வழங்கப்படாது என்று மலேசிய குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, 2027 புத்தாண்டு மற்றும் அதற்குப் பிறகு மலேசியா செல்லத் திட்டமிடும் இந்தியர்கள் விசா நடைமுறைகளை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும்.

இந்தியர்களின் அமெரிக்கக் கனவுக்கு புதிய சவால்? கிரீன் கார்டு PERM விதிகளில் டிரம்ப் நிர்வாகம் மாற்றம்

MUST READ