உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் சேவை, அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக குஜராத் மாநிலத்தின் சூரத் – வாபி நகரங்களுக்கு இடையே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான தண்டவாளச் சோதனைப் பணிகள் அடுத்த ஆறு மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பேருந்து, ரயில், விமானம் எனப் பல்வேறு போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். எக்ஸ்பிரஸ் ரயில்களைத் தொடர்ந்து, வந்தே பாரத் ரயில் சேவைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், அடுத்தகட்டமாக அதிவேக புல்லட் ரயில் சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மும்பை – அகமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மணிக்கு அதிகபட்சம் 280 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
தாமதத்தைக் கடந்த கட்டுமானப் பணிகள்:
மகாராஷ்டிர அரசின் அனுமதி, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்னைகள் காரணமாக திட்டம் இரண்டரை ஆண்டுகள் தாமதமானது.
இதையடுத்து கொரோனா பெருந்தொற்றால் மேலும் இரண்டு ஆண்டுகள் பணிகள் பாதிக்கப்பட்டன. பின்னர், 2021-ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கின.
கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, 456 கி.மீ. தொலைவுக்கு தூண்கள் அமைக்கும் பணியும், 371 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலப் பாதை அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளன.
299 கி.மீ. தொலைவுக்கு ஒலி தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 206 கி.மீ. மேம்பாலப் பாதையில் 9,300 மின் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.
நான்கு மலைப் பகுதிகளுக்கான சுரங்கப்பாதைகள் தோண்டி முடிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் அமைக்கப்படும் 21 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதையில், மலைக் குடைவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 5 கி.மீ. தொலைவுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதுவரை எட்டு ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளன.
சபர்மதி, சூரத், தானே ஆகிய மூன்று நகரங்களில் ரயில் பராமரிப்புப் பணிமனைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மகாராஷ்டிராவில் அமைக்கப்படும் சுரங்கப்பாதையில், 7 கி.மீ. தொலைவு தானே பகுதியில் சிற்றோடைக்குக் கீழே கடலுக்குள் செல்கிறது. இது இந்தியாவின் முதல் கடலடி ரயில் சுரங்கப்பாதையாக அமைய உள்ளது.
உள்நாட்டிலேயே தயாராகும் புல்லட் ரயில்:
இந்தத் திட்டத்துக்கான புல்லட் ரயில்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் முவர்ஸ் லிமிடெட் நிறுவனமும், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையும் இணைந்து ‘பி 28’ ரக புல்லட் ரயிலை உருவாக்குகின்றன.
இந்த ரயிலுக்கான முதல் பெட்டி தயாரிக்கப்பட்டு, தற்போது கட்டமைப்புச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. மணிக்கு அதிகபட்சம் 280 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பயணிக்கக்கூடிய ‘பி 35’ ரக ரயிலை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
558 பேர் பயணிக்கும் வசதி:
பயணிகளின் தேவைகள், வசதிகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புல்லட் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 660 அடி நீளமுள்ள இந்த ரயிலில் எட்டு பெட்டிகள் இடம்பெறும். மொத்தம் 557 பேர் பயணிக்க முடியும். மாற்றுத்திறனாளிகளுக்காக இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏழு பெட்டிகளில் சாதாரண வகுப்பு இருக்கைகளும், ஒரு பெட்டியில் சொகுசு வகுப்பு இருக்கைகளும் அமைக்கப்படும். சாதாரண வகுப்பில் 3+2 என்ற வரிசையிலும், சொகுசு வகுப்பில் 2+2 என்ற வரிசையிலும் இருக்கைகள் இடம்பெறும்.
ரயிலின் இரு முனைகளிலும் ஓட்டுநர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிநவீன கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் ரயிலின் இயக்கம் கண்காணிக்கப்படும்.
இரண்டு மணி நேரத்திற்குள் மும்பை – அகமதாபாத் பயணம்:
முதற்கட்டமாக சூரத் – வாபி இடையே புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான தண்டவாளச் சோதனைகள் அடுத்த ஆறு மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, படிப்படியாக மும்பை வரையிலான முழு வழித்தடத்திலும் சேவை விரிவுபடுத்தப்படும்.
மும்பை – அகமதாபாத் இடையிலான 508 கி.மீ. பயணத்தை புல்லட் ரயில் மூலம் ஒரு மணி நேரம் 58 நிமிடங்களில் கடக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதே பயணத்தை சாலை வழியாக மேற்கொள்ள 8 முதல் 9 மணி நேரம் வரை ஆகிறது.
இந்தியாவில் அதிவேக ரயில் போக்குவரத்துக்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில் புல்லட் ரயில் திட்டம் அமைந்துள்ளது.
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் ரயில் தயாரிப்பு, நவீன உள்கட்டமைப்பு, பயண நேரக் குறைப்பு ஆகியவற்றின் மூலம் இந்திய ரயில்வேயின் வளர்ச்சியில் இது முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
