
ரகசியமான மற்றும் முக்கியமான தகவல்களைப் பகிர்வதற்கு ‘WhatsApp Web’ பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஒன்றிய அரசு சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
அறிவுறுத்தலின் முக்கிய அம்சங்கள்: பகிரப்பட்ட கணினிகள் (Shared Computers), அலுவலகக் கணினிகள் மற்றும் பொது இடங்களில் உள்ள கணினிகளில் ‘WhatsApp Web’ பயன்படுத்துவதால் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ப்ரவுசர்களில் (Browser) உள்ள டேப்-ஐ (Tab) மூடிவிட்டால் மட்டும் வாட்ஸ் அப் வெப் கணக்கிலிருந்து தானாக வெளியேறாது என்றும், முறையாக Log out செய்யவில்லை எனில் அந்தக் கணினியில் உங்கள் கணக்கு தொடர்ந்து திறந்த நிலையில் இருக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
ஏற்படக்கூடிய ஆபத்துகள்: “அவ்வாறு முறையாக லாக் அவுட் செய்யாமல் திறந்த நிலையில் இருக்கும் வாட்ஸ் அப் வெப் கணக்குகளில், அங்கீகரிக்கப்படாத நபர்கள் உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள், தொடர்பு எண்கள் (Contacts) மற்றும் குழுத் தகவல்களைப் படிக்கவோ அணுகவோ கூடும்.
உங்கள் கணக்கைப் பயன்படுத்தி, உங்கள் பெயரில் நண்பர்கள், உறவினர்கள் அல்லது சக ஊழியர்களுக்குப் போலியான செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.
பயனர்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
முக்கியத் தகவல்களைத் தவிர்க்கவும்: ரகசியமான தகவல்கள், நிதி சார்ந்த விவரங்கள் மற்றும் அலுவலக முக்கியத் தகவல்களை ‘WhatsApp Web’ வழியாகப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.
முறையாக வெளியேறுங்கள் (Log Out): ப்ரவுசரில் டேப்-ஐ மூடுவதற்கு முன்பு, கட்டாயமாக ‘Log Out’ செய்து வெளியேற வேண்டும்.
பொதுக் கணினிகளைத் தவிர்க்கவும்: சைபர் கஃபே, ஹோட்டல் கணினிகள் அல்லது மற்றவர்களின் சாதனங்களில் ‘WhatsApp Web’ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
பாதுகாப்பு மற்றும் புதுப்பிப்புகள்: தவிர்க்க முடியாத சூழலில் நம்பகமான கணினியில் பயன்படுத்த நேர்ந்தால், Incognito / Private Browsing முறையைப் பயன்படுத்தலாம்; இருப்பினும், அதற்குப் பிறகும் manually log out செய்வது அவசியம். மேலும், உலாவிகள் (Browser), இயங்குதளங்கள் மற்றும் பாதுகாப்பு மென்பொருள்களை அவ்வப்போது அப்டேட் செய்து (Update) வைத்திருக்க வேண்டும்.” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
https://www.apcnewstamil.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/meta-instagram-direct-standalone-messaging-app-launch/250939
