கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரது அலுவலகம் மற்றும் இல்லம் அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான புகாரில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியருக்கு ஆபாசமான மற்றும் முறையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், பொது நிகழ்ச்சிகளின்போது தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
இந்த வழக்கு தொடர்பாக உளுந்தூர்பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. எம்எல்ஏவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
வழக்கின் விசாரணையை காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்துக்குக் கீழ் இல்லாத அதிகாரி மட்டுமின்றி, ஐஜி அந்தஸ்திலான அதிகாரி மேற்பார்வையிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்படி சுயாதீன உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைக்கவும் அறிவுறுத்தியது.
விசாரணையின் இறுதி அறிக்கையை டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, எம்எல்ஏவுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், அவரது அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதனையடுத்து எம்எல்ஏ அலுவலகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வழக்கு: இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் நியமனம்!
