தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி சக்கை போடு போட்டு வருகிறது. இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அனிருத் என தமிழ் பிரபலங்கள் அதிகம் பங்கு பெற்றுள்ளனர். எனவே படம் தமிழிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் உலகம் முழுவதும் 129.6 கோடியை வசூல் செய்தது. வேற எந்த பாலிவுட் சினிமாவும் முதல் நாளில் இந்த வசூலை எட்டியதில்லை. இந்நிலையில் ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆன இரண்டே நாளில் 240 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதே வேகத்தில் சென்றால் படம் மிக விரைவிலேயே 1000 கோடியை எட்டி பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும். பழைய கதை, ஏற்கனவே பல படங்களில் பார்த்தது போன்ற காட்சி அமைப்புகள் என ஒரு சில கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் அது படத்தின் வசூலில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலித்து சாதனை படைத்த நிலையில் இப்படமும் அவ்வரிசையில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.