நடிகர் விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக தனது 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க படமானது செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனது 69 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக வலம் வரும் விஜய் தளபதி 69 படத்திற்கு பிறகு முழுநேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார். ஆகவே தளபதி 69 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. அதன்படி படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
தளபதி 69 படத்தை எச் வினோத் இயக்க இருக்கிறார் என்று கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளியாகி வருகிறது. மேலும் படத்தை யார் தயாரிக்கப் போகிறார் என்பது தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனாலும் தில் ராஜு, லலித் குமார் போன்றோர் அந்த பட்டியலில் இருக்கின்றனர். அடுத்ததாக படத்தில் சமந்தா, மிர்ணாள் தாகூர், ஆலியா பட், திரிஷா உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் தளபதி 69 படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் , ஏற்கனவே விஜயின் மாஸ்டர் படத்தில் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார் என்பதும் எச். வினோத் இயக்கத்தில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.