ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகும் ஹேப்பி என்டிங் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே. பாலாஜி. அந்த வகையில் இவர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கி பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றார். அதே சமயம் அடுத்ததாக சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் ஆர் ஜே பாலாஜி. இதற்கிடையில் இவர் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே சொர்க்கவாசல் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ள ஆர்.ஜே பாலாஜி தற்போது ஹேப்பி என்டிங் எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தினை அம்மாமுத்து சூர்யா இயக்க குட் நைட், லவ்வர் உள்ளிட்ட படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைக்கிறார். பரத் விக்ரமன் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை கவனிக்க தினேஷ் புருஷோத்தமன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த டீசரில் ஆர்.ஜே. பாலாஜி பல பெண்களை காதலித்தது போலவும் அந்த பெண்கள் அனைவரும் ஆர்.ஜே பாலாஜியை பிரேக் அப் செய்து விட்டதாகவும் காட்டப்பட்டுள்ளது.
அடுத்தது அந்தப் பெண்கள் அனைவரும் ஆர்.ஜே பாலாஜியை கத்தியால் குத்தியும், பாட்டிலால் அடித்தும் துன்புறுத்துவது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இறுதியில் துப்பாக்கியால் ஆர்.ஜே பாலாஜி தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறார். இவ்வாறு அந்த டீசரில் காட்டப்பட்டிருக்கும் நிலையில் இந்த படம் காதல் தொடர்பான படம் என்பது போல் தெரிகிறது. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.