பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டத்தில் பெரியவர்கள் கூட சிறியவர்களாக மாறிவிடுவார்கள். அதிலும் தீபாவளி பண்டிகையானது, நாடு முழுவதும் அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடும் பண்டிகையாக இருக்கும். இனிப்புகள், புத்தாடைகள், பட்டாசுகள் என பல விஷயங்கள் இருந்தாலும் பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்கள் விழாக்களுக்கு மேலும் சிறப்பாக அமைகின்றன. குறிப்பாக சினிமா ரசிகர்கள் தங்களது இல்லங்களில் பண்டிகையை கொண்டாடுவதை விட திரையரங்குகளில் தன் விருப்ப நாயகனின் பட ரிலீஸுக்கு பட்டாசு வெடித்து கொண்டாடும் அளவுக்கு சினிமா என்பது ரசிகர்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்துள்ளது. புத்தாடைகள் அணியும் போது கிடைக்கும் ஒருவித மகிழ்ச்சி குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று படங்களை பார்த்து கொண்டாடும் போது இரட்டிப்பாகிறது. படம் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் நண்பர்களிடம் படத்தைப் பற்றி சிலாகித்து பேசும் பொழுது அந்த மகிழ்ச்சி இனிப்பை விட இரு மடங்காகும். இளைஞர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் திரையரங்குகளில் திரைப்படங்கள் கொண்டாட்டம் என்பது போல வீட்டில் இருப்பவர்களுக்கும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்தான் தீபாவளி பரிசாகும்.
“இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக” என்று விளம்பரம் வரும் பொழுதே நாம் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் நம்மை அறியாமலேயே நம் கண்கள் தொலைக்காட்சியை தேட ஆரம்பித்து விடுகிறது. விளம்பர இடைவேளைகள் இருந்தாலும் கூட எந்தவித சலிப்பும் இன்றி படத்தை முழுமையாக பார்த்து முடித்தபின் நம் மனதில் எழும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். தீபாவளிக்கு மறுநாளில் பள்ளிக்கோ அலுவலகத்துக்கோ சென்று நாம் பார்த்த திரைப்படத்தை பற்றிய விமர்சனங்களை பகிர்ந்து கொள்ளும் போதும் எழும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. சினிமா தொடங்கிய காலம் முதலே பண்டிகையும் சினிமாவும் பிரிக்க முடியாத பந்தத்துடன் இருந்து வருகிறது. மணல் தரையில் அமர்ந்து டென்ட் கொட்டாயில் படம் பார்த்து விசில் அடித்த ரசிகன், பின்னர் மர நாற்காலிக்கும், சொகுசு இருக்கைகளுக்கும், குளிர்சாதன வசதியுடன் சினிமாவை ரசிக்கும் அளவுக்கு பரிமாணம் அடைந்தான்.
தற்போது உலகமே கைக்குள் அடங்கி விட்டது என்னும் அளவிற்கு தொழில்நுட்பங்களும் வளர்ந்து விட்டன. இன்றைய யுகத்தில் OTT களில் வெளியாகும் விழாக்கால சிறப்பு திரைப்படங்களையும் கொண்டாடி வருகிறோம். மொபைல் போன்ற சிறிய திரையோ, தியேட்டர் போன்ற பெரிய திரையோ, அளவில் மாறுபாடு கொண்டிருந்தாலும் படங்களை பார்க்கும் பொழுது ஏற்படும் அனுபவங்கள் என்றுமே தனி ரகம்தான். அதன் படி 2024 ஆம் ஆண்டின் இந்த தீபாவளி தினத்திலும் திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும்,OTT களிலும் பல சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன. குடும்பத்துடன் அன்பை பகிர்ந்து, விருப்பமான திரைப்படங்களை பார்த்தும் விழாவினை சிறப்பாக கொண்டாடுவோம்.
- Advertisement -