நாம் தமிழர் கட்சியில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிர்வாகிகள் விலகல், கட்சியின் தற்போதைய தேர்தல் நிலைப்பாடு மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசுடனான சித்தாந்த முரண்பாடுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா ஃபர்னா அதிரடியான விளக்கங்களை அளித்துள்ளார் ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு அவர் அளித்த நேர்காணலின் முக்கிய செய்தி விவரங்கள் வருமாறு:

இயக்குனர் களஞ்சியம் விலகல் குறித்து:
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த இயக்குனர் களஞ்சியம் கட்சியை விட்டு விலகியது குறித்துப் பேசிய பாத்திமா ஃபர்னா, “காரணங்கள் தேடுபவர்கள் காரியங்கள் செய்வதில்லை; காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் தேடுவதில்லை. மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு என்பது கட்சியில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கே வழங்கப்பட்டது. அதைச் செய்ய முடியாத இயலாமையின் வெளிப்பாடே அவரது இந்த முடிவு. 15 ஆண்டுகால அரசியல் பயணத்தில் இதுபோன்ற முரண்பாடுகள் எல்லா கட்சிகளிலும் வருவது இயல்புதான்” என்று குறிப்பிட்டார்.

”நாங்கள் சமரசம் செய்யாததால் தான் 4% வாக்குகள்”:
தேர்தல் தோல்விகள் மற்றும் மாற்று அரசியல் குறித்துப் பேசிய அவர், “கடந்த காலத்தில் காமராசர், எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணா போன்ற மாபெரும் தலைவர்களே தேர்தல் தோல்விகளைச் சந்தித்துள்ளனர். மற்ற அரசியல் கட்சிகள் தங்களின் வெற்றிக்காக ஏதோ ஒரு இடத்தில் சமரசம் செய்து கொள்கின்றன.
ஆனால் நாம் தமிழர் கட்சி கொள்கையில் துளியும் சமரசம் செய்யாமல் நேர்மையாக நிற்பதால்தான், மக்கள் இன்று எங்களை 4 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது பெரிய அரசியல் ஆற்றலாகத் தக்க வைத்துள்ளனர். தற்போது ஆதிமுக மற்றும் தவெக (மைனாரிட்டி அரசு) ஆகிய கட்சிகளின் சூழல்களுக்கு மத்தியில் ஆர்கானிக்கான (Organic) வளர்ச்சியை நோக்கி நாங்கள் நகர்கிறோம்” என்றார்.
சீமான் ‘பொது வேட்பாளர்’ என்ற யூகமும் இடைத்தேர்தலும்:
வரவிருக்கும் இடைத்தேர்தலில் சீமான் அவர்கள் ‘பொது வேட்பாளராகக்’ களம் இறங்குவார் என்ற ஊடகங்களின் யூகங்களுக்கு அவர் பதிலளித்தார்:
”திமுக அல்லது ஆதிமுகவுடன் நாம் தமிழர் கட்சி திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பதும், சீமானைப் பொது வேட்பாளராக நிறுத்தப் போகிறார்கள் என்பதும் முற்றிலும் ஊடகங்கள் கிளப்பிவிடும் யூகங்களே தவிர, அதில் எந்த உண்மையும் இல்லை.
நாம் தமிழர் கட்சி எந்தக் காலத்திலும் தேர்தல் ஆதாயத்திற்காகத் தனது கொள்கை மற்றும் கோட்பாட்டை விட்டுக்கொடுத்துக் கூட்டணி வைக்காது.
அதேநேரத்தில், ‘சட்டமன்றத்திற்குள் சீமானின் வலிமையான குரல் ஒலிக்க வேண்டும்’ என்ற எண்ணம் சாதாரண மக்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட படித்த சமூகத்தினர் மத்தியிலும் ஆழமாக உருவாகியுள்ளது. மக்களின் இந்த விருப்பத்தின்படி சீமான் அவர்கள் களம் இறங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தவெக அரசு மீதான விமர்சனம்:
தவெக அரசின் அண்மைக்கால நியமனங்கள் குறித்துப் பேசிய அவர், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டதைக் கடுமையாக விமர்சித்தார். “டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்காக அல்லும்பகலாகப் படித்துக் காத்திருக்கும் தகுதியான இளைஞர்கள் இருக்கும்போது, தங்களின் கட்சிக்காரர்களுக்குப் பதவிகளை அள்ளித் தருவது ஜனநாயகத்திற்கு எதிரானது.
மயில்சாமி அண்ணாதுரை போன்ற தகுதியான ஆளுமைகளுக்கு முன்னால், அனுபவமில்லாத நபர்களை இத்தகைய பொறுப்புகளில் நியமிப்பதன் மூலம் தவெக அரசு தனது பொறுப்பற்ற தனத்தையே காட்டுகிறது. தவெக தலைவர் விஜய் நமக்குத் தம்பிதான் என்றாலும், அவர்களின் திராவிட மற்றும் பெரியாரியக் கோட்பாட்டு முரண்பாடுகளை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வெளிப்படையாக எதிர்க்கும்” என்று பாத்திமா ஃபர்னா அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
