spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைராமதாஸ் பிடிவாதம்! அன்புமணி கையில் இருக்கும் ஆயுதம்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

ராமதாஸ் பிடிவாதம்! அன்புமணி கையில் இருக்கும் ஆயுதம்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

-

- Advertisement -

பாமகவின் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்காததற்கு காரணம் அவர் மனம் மாறி இறங்கி வருவார் என்கிற எதிர்பார்ப்பு தான் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டம்  தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- இன்றைக்கு மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் தலைமையிலான பாமக, அன்புமணி தலைமையிலான பாமக என்று 2 பாமக போட்டியிடும் என்பது தெரிகிறது. இவர்கள் யாருடன் நிற்கப் போகிறார்கள் என்பதை பொறுத்துதான் அவர்களின் பலம் முடிவாகும். தனக்கு பிறகுதான் அன்புமணி என்று மருத்துவர் ராமதாஸ் நினைக்கிறார். தேர்தலில் கூட்டணி அமைப்பது, யாருக்கு சீட்டு வழங்குவது என்று எல்லாவற்றையும் முடிவு செய்யப் போவது அன்புமணியா? ராமதாசா? என்கிற போட்டி உள்ளது.  ராமதாஸ்தான் எல்லாம் என்றால், அவர் அன்புமணியை தாண்டி முடிவுகளை எடுப்பார். அது எதிர்காலத்தில் அன்புமணிக்கு பிரச்சினையாக வரும். பாமகவில் கட்சியின் பெரும்பகுதி அன்புமணி உடன்தான் நிற்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது. அன்புமணியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஜி.கே.மணி போன்ற பழைய ஆட்களை வைத்தும் காலி இடங்களை நிரப்புகிறார்.கட்சிக்குள் யார் பெரியவர் என்று கேட்கிறபோது 2026 தேர்தல் தான் அதை முடிவு செய்யும்.

பாமக உடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்பது அதிமுகவுக்கு தான் உள்ளது. மு.க.ஸ்டாலின், இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுவிட்டார். அவருக்கு பாமகவின் ஆதரவு தேவையில்லை. அதேவேளையில் அதிமுகவுக்கு, பாமகவின் ஆதரவு கட்டாயம் தேவை. 90 தொகுதிகளில் பாமகவின் துணை இல்லாமல் அதிமுகவால் களம் காண முடியாது. சேலம், தருமபுரி, நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சிதம்பரம் மாவட்டங்களில் உள்ள 36 தொகுதிகளில் ஸ்டாலினைவிட பெரிய தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால், அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. சிதம்பரம் தொகுதியில் அதிமுக – பாஜக கூட்டணியை, ராமதாஸ் – திருமாவளவன் இணைந்து டெபாசிட் இழக்கச் செய்தனர். அதே பாமக கூட்டணியில், எடப்பாடி பழனிசாமி பாமகவை டெபாசிட் இழக்க செய்திருக்கிறார். வன்னியர் வாக்குகள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியிடம் குவிந்துள்ளன. அப்போது அதிமுகவுக்கு கூடுதல் வாக்குகள் இருந்தால்தான் வெற்றி பெறும்.

மருத்துவர் ராமதாஸ், அதிமுக உடன் கூட்டணி அமைக்கவிரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமியை பலப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. திமுக கூட்டணியில் இடம் கிடைக்குமா? என்றும் எதிர்பார்க்கிறார். அன்புமணிக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்தது தன்னுடைய தவறு என்று சொன்ன மருத்துவர் ராமதாஸ், பொதுக்குழு கூட்டத்திற்கு தன்னுடை மகள் காந்திமதியை  மேடையில் அமர வைத்துள்ளார். அன்புமணியை எதிர்கொள்ள ரத்த உறவுகள் இல்லாமல் முடியாது என்கிற எதார்த்த அரசியலை ராமதாஸ் சொல்கிறார். திருச்செந்தூர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கிறிஸ்தவ நாடார்களை, எம்ஜிஆர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். அடுத்தபடியாக ஜெயலலிதா,  முக்குலத்தோர் சமுதாயத்தை கவரும் விதமாக முத்துராமலிங்க தேவர் மாவட்டம் என்று பெயர் சூட்டினார். அது அவர்களுக்கு கிடைத்த பெருமை. அதேபோல் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெறுவதற்காக, எடப்பாடி பழனிசாமி 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தார். அது அவர்களின் பெருமையாக உள்ளது. அப்போது 10.5 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து அன்புமணி களமாடினார் என்றால்? மருத்துவர் ராமதாசும் அதை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அவரை கட்சியில் இருந்து நீக்காததற்கு காரணம் நாளை அவர் மனம் மாறி இறங்கி வருவார் என்கிற எதிர்பார்ப்பு கூட இருக்கலாம். அன்புமணிக்கு என்று ஒரு ஆயுதம் உள்ளது. 10.5 சதவீதம் என்று தனித்து நின்றார் என்றால், 2016 தேர்தலில் நிரூபித்ததை போல வாக்கு சதவீதத்தை நிரூபிக்க முடியும். அன்புமணிக்கு  அமைப்பு பலம் உள்ளது. அவரே வேட்பாளராக நிற்க முடியும். சவுமியா அன்புமணிக்கு, மற்ற சமுதாயத்திலும் ஓரளவு ஏற்றுக்கொண்டுள்ளனர். தருமபுரியில் சவுமியா தோற்றதற்கு காரணம், வன்னியர்களின் வாக்குகளை எடப்பாடி பழனிசாமி பெற்றதுதான். பொதுக்குழுவில் அன்புமணியை நீக்காததற்கு காரணம், அவர் மனவலிமையை இழந்து தன்னிடம் வருவார் என்கிற ராமதாசின் எதிர்பார்ப்பு ஆகும். ஆனால் சவுமியா அன்புமணி என்ன முடிவு எடுப்பார் என்பதில் சந்தேகம் உள்ளது. எந்த கட்சியும் 10.5 சதவீத வாக்குகளை வழங்க முன்வராது. காரணம் அதை பேசினால் மற்ற கட்சியினர் வாக்களிக்க மாட்டார்கள்.

இந்த நிலையில், மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு சொல்கிறார். இந்த பொதுக்குழு செல்லுடியாகுமா? என்பது முக்கியமில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் என்ன பெறுகிறார்? அன்புமணி என்ன பெறுகிறார் என்பதுதான் கேள்வியே? மக்களால் தலைவராக யார் ஏற்றுக்கொள்ளப்படுகிறார் என்பது முதல் சுற்று வெற்றியாகும். அடுத்தபடியாக தேர்தலில் சரியான கூட்டணி அமைத்து, யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதாகும். அதையும் தாண்டி 10.5 சதவீத வாக்குகளை முன்னிறுத்தி அன்புமணி 6 சதவீத வாக்குகளை பெற்றுவிட்டார் என்றால், அது அவருக்கு கிடைத்த வெற்றியாகும். பாமக ஒரு தனிப்பெரும் சக்தியாக வந்ததால்தான் வன்னியர்கள் மிகப்பெரிய எழுச்சியை அடைந்தனர். அனைத்துக்கட்சிகளில் இருக்கும் வன்னியர்களும் பாமக ஒரு சக்தியாக இருப்பது நல்லது என்று நினைக்கின்றனர். எனவே பாமக ஒன்றாக இருந்தால்தான், மற்ற கட்சிகளில் உள்ள வன்னியர்களுக்கு அது பலமாகும். உத்தரபிரதேசத்தில் இதேபோல் தந்தை – மகன் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது முலாயம் சிங் யாதவ் விட்டுக்கொடுத்தார். குமாரசாமிக்காக தேவகவுடா விட்டுக்கொடுத்தார். இங்கே பாமக பிராதன கட்சி இல்லை. ஒரு துணை கட்சிதான். அப்போது, கூட்டணி என்றால் தன்னை நம்பிதான் வருவார்கள் என்று ராமதாஸ் நம்புகிறார். அன்புமணியும், வன்னியர்கள் ஆதரவை நம்பிதான் நிற்கிறார். மற்றொருவரின் ஆதரவை அவர் நம்ப மாட்டார் என்றுதான் நினைக்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ