திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் தாங்கள் கொடுக்கும் இடத்தை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வருவதாக இருந்தால் தேமுதிக வரலாம் என்றும், இல்லாவிட்டல் போகலாம் என கூறிவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் இதயா தெரிவித்துள்ளார்.


தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பிரேமலதா வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாவதற்குள் கூட்டணியை அறிவிப்பதாக சொல்லி விட்டார். இதற்கு முன்பாகவே பல முறையும் சொல்லியும் அவர் கூட்டணியை அறிவிக்கவில்லை. தேமுதிக என்பது ஒரு பார்கெயினிங் கட்சியாகும். கடந்த முறை அதிமுக, திமுக என இரு கட்சிகளும் அவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டனர். இம்முறையும் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே சமூக வலைதளங்களில் எழுதுகிறார்கள். கடந்த முறை வேறு வழியின்றி அமமுக உடன் கூட்டணி வைத்தார்கள். அதேபோல் இம்முறை வேறு வழியில்லை என்றால் தவெக உடன் கூட்டணிக்கு போய்விடுவார்கள். தேமுதிகவுக்கு முக்கியத்துவம் அதிகரித்து இருந்தால் இரு கட்சிகளும் இந்நேரம் அவரிடம் பேசி கூட்டணியை முடித்து இருப்பார்கள்.

இருவரும் தங்களால் இவ்வளவு தொகுதிகளை தான் வழங்க முடியும். ஏற்றுக்கொண்டு வருவதாக இருந்தால் வாங்க என்று சொல்லிவிட்டதாக தான் தகவல்கள் வருகின்றன. திமுகவை பொறுத்தவரை ராஜ்யசபா இடம் தருவதாக சொல்லிவிட்டனர். ஆனால் இடங்களில் பிரச்சினை உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை தன்னுடைய மகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வேண்டும் என்று பாஜகவிடம் கேட்கிறார்கள். மேலும், அதிமுக கூட்டணியில் கூடுதல் இடங்களும், தேர்தல் செலவுக்கு நிதியும் கேட்கிறார்கள். திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. அங்கே சென்றால் வெற்றி பெற்றுவிடலாம் என தெரிகிறது எனவே. அதிமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்கிறார். ஆனால் அது கிடைப்பது கடினம். எப்படியாக இருந்தாலும் 2 வாரத்திற்குள் கூட்டணி தொடர்பான முடிவுகள் தெரிந்துவிடும். அதிமுகவிடம் தேமுதிகவின் எதிர்பார்ப்புகள் பெரிதானதால் அதிமுகவினர் விரக்தி அடைந்துவிட்டனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறுகையில், அவர்களை திருப்திபடுத்தவே முடியாது என்றும், அவர்கள் வைக்கும் கோரிக்கையை கேட்டால் உங்களுக்கு நெஞ்சுவலியே வந்துவிடும் என்கிறார்கள். தங்களுடைய இடம் எது என்று அவர்களுக்கு தெரியவில்லை. மிகுந்த கற்பனையில் இருக்கிறார்கள். தாங்கள் இல்லாவிட்டால் யாரும் வெற்றி பெற முடியாது என்கிற இருமாப்பில் பேசுகிறார் என்று சொன்னார். திமுக தரப்பில், தேமுதிகவிடம் ஓரளவு பேசியுள்ளனர். இருந்த போதும் தேமுதிக இன்னும் முடிவு எடுக்கவில்லை. இழுபறியாக தான் உள்ளது. திமுக தரப்பில் கூட்டணி தொடர்பாக முடிவு செய்து விட்டு வரும்படி கூறிவிட்டனர். அதன் பிறகு தேமுதிக கூட்டணியை விவகாரத்தை பாலோ செய்யவில்லை என்பது தான் தகவல். அப்படி செய்வதும் நல்லதுதான். இல்லாவிட்டால் கொள்கையே இல்லால் பேரம் பேசுகிற கட்சிகளுக்கு உறைக்கும். ஒருவர் எவ்வளவு இடங்கள் தருவார்கள் என்று பார்த்துவிட்டு கூட்டணிக்கு போவது ஏற்புடையது அல்ல. தேமுதிகவுக்கு ஒரு சதவீதம் வாக்கு இருந்தாலும் அவர்களை இரு கட்சிகளும் எதிர்பார்க்கிறார்கள். திமுக வெற்றியை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
விஜய் வருகை தேர்தலின் டிரெண்டிங்கை மாற்றி உள்ளது. திமுகவுக்கு அது ஒரு பலம். என்னை பொருத்தவரை திமுக அரசாங்கத்தை குறை சொல்வது ஏற்புடையது அல்ல. பாலியல் குற்றங்கள், முன்விரோத கொலைகள் எந்த ஆட்சியாக இருந்தாலும் நடைபெறும். குற்றங்களை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான். இதில் நீதித்துறையின் பங்களிப்பு அவசியமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


