
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.

அதிமுகவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நடுநிலையோடு கவனித்தீர்களா? தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகைக்குப் பிறகு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் எனப் பல முக்கியப் புள்ளிகள் கொத்துக்கொத்தாகத் தவெக-வில் இணைந்து வருகிறார்கள்.
ஆனால், தன் சொந்தக் கட்சியே சரிந்து கொண்டிருக்கும் போது, அதைப்பற்றி எடப்பாடி பழனிசாமி கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக நிர்வாகிகளை வெளியேற்றும் ஒருவித ‘ஃபோபியா’வால் (Exclusion Phobia) அவர் பாதிக்கப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. கட்சிக்காக உழைத்தவர்களை, கட்சி நலனுக்காக அறிவுரை சொல்பவர்களை அரவணைத்துச் செல்வது என்பது அவருக்கு எட்டிக்காயாகக் கசக்கிறது.
நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும்போது, எடப்பாடி தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி, வழக்கம் போலப் போகிறவர்கள் மீது பழி போடும் அரசியலையே கையில் எடுத்துள்ளார். வெற்றிக்கு உழைத்த அதிமுக தொண்டர்களின் தியாகத்தை கொஞ்சமும் உணராமல், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளார்கள்; “அவர்களை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது” என்று சாபம் விடுகிறார். மேலும், “அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது” என்றும் முழங்கியுள்ளார்.

திமுகவோடு ரகசியக் கூட்டணி?
மக்கள் ஏன் கடந்த தேர்தல்களில் 47 தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெற வைத்தார்கள்? ஆளுங்கட்சியான திமுகவும் வேண்டாம், புதிய சக்தியான தவெகவும் வேண்டாம், அதிமுகதான் தங்களுக்குப் பிரதான மாற்று என்று நம்பித்தானே மக்கள் வாக்களித்தார்கள்?
கட்சியைப் பிளந்து தவெகவுக்கு ஆதரவு அளித்ததும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடியதும் தவறுதான்; அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், போகிறவர்களைக் குற்றம் சொல்லும் எடப்பாடி பழனிசாமியிடம் தொண்டர்கள் கேட்கும் நியாயமான கேள்வி இதுதான்:
திமுகவை எதிர்ப்பதற்காகவே புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு, திமுக எதிர்ப்பு என்ற அரசியல் பாசறையிலேயே வளர்க்கப்பட்ட ஒரு பேரியக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்துகொண்டு, அதே திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கவும், முதல்வர் நாற்காலியில் அமரவும் நீங்கள் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தினீர்களே… அது சரியா? அது நியாயமா? இதை மட்டும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மாவின் புனித ஆன்மாக்கள் உங்களை மன்னித்துவிடுமா?
அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது என்கிறீர்களே… இனிமேல் உடைப்பதற்கு அங்கே என்ன மிச்சமிருக்கிறது? வழிபாட்டு அரசியலிலும், தனிநபர் துதியிலும் ஊறிப்போன ஒரு சிலர், கட்சியை விட்டு வெளியே சென்றவர்களை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கட்சியின் எதிர்காலமே சூனியம் என்றாகிவிட்ட பிறகு, சுயமரியாதை உள்ள நிர்வாகிகள் விலகாமல் என்ன செய்வார்கள்? அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒருவிதமான அச்சமும், ஆழமான உளவியல் ரீதியான ஆதங்கமும் பரவி வருவதை எவராலும் மறுக்க முடியாது.
பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவில் இருந்து மிக மிகச் சிலரைத் தவிர வேறு யாரும் ஆளும்கட்சியான தவெகவில் இணையவில்லை; ஏன் தெரியுமா? அங்கே தலைமை வலுவாக இருக்கிறது, தன் கூட்டணியையும் தொண்டர்களையும் தக்கவைக்கத் தெரிந்திருக்கிறது. ஆனால், தொடர் தோல்விகளுக்கான காரணத்தையே ஆராயாத, தோல்விகளுக்குப் பொறுப்பேற்காத எடப்பாடி பழனிசாமியா இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கப் போகிறார்?”
ஈகோவால் அழியும் இயக்கம்
“போகிறவர்களைக் குறை சொல்லும் எடப்பாடி பழனிசாமி போன்ற உத்தமர்கள், போகிறவர்களைத் தடுக்க என்ன முயற்சி செய்தீர்கள்?” – இது ஏதோ சாதாரண விமர்சனம் அல்ல, கட்சியின் அடிமட்டத் தொண்டனின் அடிமனதில் இருந்து எழும் தார்மீக ஆதங்கக் குரல்!
அதிமுக என்பது தனிநபர் சொத்து அல்ல; அது பல கோடி தொண்டர்களின் உழைப்பாலும், தியாகத்தாலும், இரத்தத்தாலும் கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்டமான கோட்டை. உங்களது செயல்பாடு, உங்களது வாரிசின் செயல்பாட்டால் அந்தக் கோட்டையின் சுவர்கள் ஒவ்வொன்றாகச் சரியும்போது, சுவர்களைக் குறை சொல்வதில் என்ன பயன்? அதைத் தாங்கிப் பிடிக்க வேண்டிய தூண்களின் கடமை, அதாவது கட்சித் தலைமையின் கடமை என்ன ஆனது?
கட்சியில் இருந்து விலகிச் செல்பவர்கள் மீது பழிச்சொற்களை வாரி இறைப்பதை முதலில் நிறுத்துங்கள். அவர்கள் ஏன் விலகுகிறார்கள் என்ற உண்மைக் காரணத்தைக் கண்டறியுங்கள். அவர்கள் விலகிச் செல்லாமல் இருப்பதற்கு ஒரு தலைமையாக நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யுங்கள். உங்களது தனிப்பட்ட ஈகோவால் நாளுக்கு நாள் கட்சியை நீங்களே காலி செய்து வருகிறீர்கள். தயவுசெய்து முழுவதுமாக காலி செய்து விடாதீர்கள்!

இளம் தலைமை காலத்தின் கட்டாயம்!
உண்மை எப்போதும் சுடத்தான் செய்யும்! உடனடியாக, எதற்கும் விலைபோகாத, சமரசமில்லாத ஒரு இளம் தலைமையை (Young Leadership) கொண்டு வந்து கட்சிக்கு புத்துயிர் பாய்ச்சவில்லை என்றால், தமிழக அரசியல் வரலாற்றில் “அதிமுக என்றொரு இயக்கம் முற்காலத்தில் இருந்தது” என்று பாடப்புத்தகத்தில் படிக்கும் அவல நிலை ஏற்பட்டுவிடும். வெறும் வெற்று முழக்கங்களை நிறுத்திவிட்டு, முறையான நிர்வாகப் பண்போடு, எஞ்சியிருக்கும் தொண்டர்களையாவது அரவணைத்து வழிநடத்தினால் மட்டுமே இயக்கத்தைக் காப்பாற்ற முடியும்!
