சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துகொண்டு எழுச்சி உரை ஆற்றினார்.


மருத்துவமனையிலிருந்து நேராகப் போராட்டக் களத்திற்கு வந்த மாணவன்:
முன்னதாக, இரண்டு நாட்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு எதிராக ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விக்கி என்ற மாணவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அம்மாணவர், அங்கிருந்து நேராக எழும்பூர் போராட்டக் களத்திற்கு வருகை தந்தது மாணவர்களிடையே பெரும் உணர்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
“எளிதில் கிடைக்காத வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி” — சு.வெங்கடேசன் பேச்சு:
போராட்டக் களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது:
“இன்று நாடே ஒரு மிகப்பெரிய வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இது முழுமையான வெற்றியா என்ற கேள்விக்கு நாம் நிதானமாகப் பதில் சொல்லிக்கொள்ளலாம்; ஆனால், இது எங்களுக்கான வெற்றி என்பதைச் சொல்ல எவரும் தயங்கக் கூடாது.
விவசாயிகள் போராடினார்கள், தொழிலாளர்கள் போராடினார்கள், ஆயிரக்கணக்கான தேசிய இனங்கள் தங்கள் உரிமைக்காகப் போராடிய போதும் எளிதில் கிடைக்காத வெற்றியை, இன்று இந்திய மாணவர்களும் இளைஞர்களும் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.”
மத்திய அரசை நோக்கிப் பாய்ந்த விமர்சனக் கணைகள்:
தொடர்ந்து மத்திய அரசையும் பிரதமரையும் கடுமையாக விமர்சித்துப் பேசிய சு.வெங்கடேசன் எம்பி:
பிரதமரை மண்டியிட வைத்த மாணவர்கள்: “வாழ்நாள் முழுவதும் அமெரிக்க அதிபரிடம் மட்டுமே மண்டியிட்ட பிரதமரை, இந்திய மாணவர்களிடம் மண்டியிட வைத்த பெருமை உங்களையே சாரும். நள்ளிரவு 12 மணிக்கு வீடியோ வெளியிட வைத்ததை விடப் பெரிய வெற்றி வேறெதுவும் இருக்க முடியாது.”
டெல்லி நிர்வாகச் சீர்கேடு: “நான்கு நாட்கள் டெல்லியில் இருந்தோம்; நான்கு நாட்களும் இணையதளம் வேலை செய்யவில்லை. 5 நாட்கள் நாடாளுமன்றத்திலேயே நெட்வொர்க் வேலை செய்யவில்லை. இதைவிடக் கேவலமான நிர்வாகம் வேறு எதுவும் இருக்க முடியுமா?”
அமைச்சரின் ராஜினாமா பின்னணி: “மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பது ஒரு பொருட்டே அல்ல. இது தர்மேந்திர பிரதானின் ராஜினாமா இல்லை, மோடி என்ற மனிதனின் அகங்காரத்தின் வீழ்ச்சி.”
முத்திரை குத்தும் அரசியல்: “போராட்டத்தில் அந்நிய சக்திகள் புகுந்துவிடக் கூடாது எனக் கடிதம் எழுதுகிறார்கள். மோடி அரசுக்கு எதிராக யாரெல்லாம் போராடுகிறார்களோ அவர்கள் மீது ‘அந்நிய நாட்டுச் சக்திகள்’, ‘பாகிஸ்தான் உளவாளிகள்’, ‘நகர்ப்புற நக்சலைட்டுகள்’ என முத்திரை குத்துவதுதான் இவர்களது வழக்கமான பாணி.”
மாணவர்களின் எழுச்சிப் போராட்டத்தால் மத்திய அரசின் அகங்காரம் நொறுங்கியுள்ளதாகத் தெரிவித்துத் தனது உரையை நிறைவு செய்தார்.
“சும்மா ரீல்ஸ், சீன் போடாதீங்க!” – விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்!
