
என்.கே.மூர்த்தி
மிகப் பெரிய தொழில் அதிபர்கள், பெரும் பண்ணையாளர்கள், பணத்திலேயே புரளக் கூடியவர்கள் யாரும் ஒரே நாளில் விழுந்து விடுவதில்லை. அதேபோன்று அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள், உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் யாரும் ஒரே நாளில் சரிந்து தெருவுக்கு வந்துவிடுவதில்லை. சரிவு என்பது அலட்சியத்தாலும், அகம்பாவத்தினாலும் படிப்படியாக நடக்கக்கூடியது.

உங்களுக்கு தெரியும் ஒரு பிரம்மாண்டமான கோட்டை ஒரே நாளில் இடிந்து விழுந்து விடுவதில்லை. அதன் சுவர்களில் விழும் சிறிய விரிசல்களை பல காலங்களாக கண்டுக்கொள்ளாமல் இருந்ததாலும் கட்டிடத்தின் அஸ்திவாரத்தை மெல்ல மெல்ல அரிக்கும் கரையான் கூட்டத்தை கவனிக்காமல் அலட்சியமாக விட்டதாலும், ஒரு நாள் மொத்தக் கோட்டையும் இடிந்து விழுகிறது. அதேபோன்று தான் மனிதர்களின் ஒழுக்கமும். ஒரு நல்ல மனிதனின் வீழ்ச்சி என்பது நிலநடுக்கம் போல திடீரென நடப்பதில்லை; அது மண் அரிப்பு போன்று மிக மெதுவாக, நமக்கே தெரியாமல் நமக்குள் நடக்கின்ற நீண்ட நாள் செயல்முறை.
என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்திய வரைப் படத்தில் தேடினாலும் சுலபத்தில் கண்டுப்பிடிக்க முடியாத ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவன் நான். வறுமைக்கோடு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால் முதலில் என் குடும்பத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். என் பெற்றோர்கள் அணிந்திருந்த ஆடைகளில் “நெய்யப்பட்ட நூலை விட கைகளால் தைக்கப்பட்ட நூல்களே அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு வறுமையின் வாயில் அகப்பட்டு மீளமுடியாமல் வாழ்ந்த குடும்பம் எங்களுடையது. அந்த நிலையிலும் தன் மகனை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்று என் பெற்றோர்கள் ஆசைப்பட்டார்கள்.
1984 இல் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். அப்பொழுது என் வகுப்பாசிரியர் மாதவன் என்னை அழைத்து அருகில் உள்ள கச்சிராயபாளையம் என்ற நகரத்தில் 160 ஓவிய நோட் புத்தகங்களை (Map drwing books) வாங்கி வருமாறு பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தார். புத்தகங்களுக்கு தேவையான தொகையை விட கூடுதலாக போக்குவரத்து செலவுக்கு ரூ.50 கொடுத்து விட்டார். செலவு போக மீதியை ஒப்படைக்க வேண்டும்.
நான் கச்சிராயபாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கினேன். அங்கே ஒரு பிரியாணி கடையை பார்த்தேன். அதிலிருந்து வரும் வாசனை அதுவரை நான் நுகராதது. அது என்னை ஈர்த்தது. எப்படியாவது சாப்பிட வேண்டும் என்று தூண்டியது. சாப்பிடவும் முடிவு செய்து, சாப்பிட்டு முடித்தேன். என் அன்றைய வயதில் அதுபோன்ற ஒரு உணவை நான் அதற்கு முன்பு சாப்பிட்டதில்லை. புத்தகங்களை வாங்கிக்கொண்டு பேருந்தில் ஏறிக்கொண்டேன்.பேருந்தில் வரும்போது மனம் பதற்றமாகவே இருந்தது. எப்படி கணக்கு சொல்வது என்று யோசித்து கொண்டே வந்தேன். அரசம்பட்டு பள்ளி வாசலில் பேருந்து நின்றது. புத்தகக் கட்டை இறக்கினேன். உதவிக்கு மற்ற மாணவ நண்பர்களும் ஓடி வந்தார்கள்.
ஆசிரியர் புத்தகங்களை எண்ணினார். சரியாக இருந்தது. செலவு போக மீதி ரூபாயை கேட்டார். ஒரு புத்தகத்தின் மீது 10 பைசா கூடுதலாக கணக்கு போட்டு, திடீரென்று புத்தகத்தின் விலை கூடி விட்டது. எதிர்பாராத வகையில் நடந்து விட்டதென்று கடைக்காரர் சொன்னதாக ஆசிரியரிடம் சொன்னேன். அவர் நம்பவில்லை. அவர் முகம் மாறியது. என் இதயம் படபடத்தது. மாட்டிக்கொள்வோமோ என்று பயந்தேன். சரி… போ, நான் பேசிக் கொள்கிறேன் என்றார். அப்பாடா என்று வகுப்பறைக்குள் சென்றேன். ஆசிரியருக்கு சந்தேகம் வந்துவிட்டதை உணர்ந்தேன்.
உடனடியாக கச்சிராப்பாளையம் சாந்தி புத்தகக் கடைக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை பள்ளி உதவியாளர் மூலமாக அஞ்சல் பெட்டியில் போட வைத்துவிட்டார் என்கிற தகவல் கிடைத்தது. அவ்வளவுதான் என் நிலை, அப்பாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான், கொன்றுவிடுவார். என்ன செய்வது என்று யோசித்தேன். என் வகுப்பு தோழன் அருணனின் தந்தை போஸ்ட் மாஸ்டர். அவர் மூலமாக அந்த கடிதத்தை எடுத்து கிழித்து விடலாம் என்று முயற்சி செய்தேன். அதுவும் தோல்வியில் முடிந்தது. நண்பரின் தந்தை என்னையும், அருணையும் கடுமையாக கண்டித்தார். இனிமேல் என்னோடு சேரக்கூடாது என்று அவருடைய மகனை எச்சரித்தார்.

சம்பவம் நடந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. நான் முற்றிலுமாக மறந்து போனேன். ஒரு நாள் பள்ளி இடைவேளை நேரத்தில் டீ, பிஸ்கட் வாங்கி வரும்படி ஆசிரியர் என்னை அனுப்பி வைத்தார். கடையில் டீ வாங்கிக்கொண்டு திரும்பி வரும்போது அந்த உருவத்தை பார்தேன். அவரை எங்கையோ பார்த்த மாதிரி ஞாபகம் ஆனால் திடீரென்று நினைவுக்கு வரவில்லை. மீண்டும் உற்று கவனித்தேன். அவரேதான், சாந்தி புத்தகக் கடை உரிமையாளரே தான். கடிதத்தை எடுத்துக் கொண்டு நேரில் வந்துவிட்டார். நான் அவ்வளவுதான்… நன்றாக மாட்டிக்கொள்ள போகிறேன். நான் பணத்தை கையாடல் செய்து விட்டேன் என்று தெரிந்தால் என் வகுப்பு தோழர்கள், தோழிகள் என்ன நினைப்பார்கள்.
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கடைக் காரரை பார்த்து வணக்கம் வைத்தேன். அவர் பதிலுக்கு வணக்கம் சொல்லாமல் முறைத்து பார்த்தார். ஓ..ஓ.. நீ தான் புத்தகம் வாங்க வந்த தம்பியா? ஆமாம் சார். ஏன் இப்படி செய்தாய்? .. அய்யா மன்னித்து விடுங்கள். நீங்கள் மட்டும் இப்போது என்னை காப்பாற்ற வில்லை என்றால் நான் இன்று முதல் பள்ளிக்கு வரமாட்டேன். இப்போதே எங்கையாவது ஓடி போய் விடுவேன் என்றேன்.
என் கையை இறுகப் பிடித்துக் கொண்டார். உன் அப்பா என்ன வேலை செய்கிறார் என்று கேட்டார். கூலி வேலை செய்கிறார்கள் என்றேன். சொந்தமாக நிலம் இருக்கிறதா என்று கேட்டார். இல்லை என்றேன். வீடு இருக்கிறதா என்றார். வீடு மாதிரி இருக்கிறது என்றேன். அது என்ன வீடு மாதிரி என்றார். நான்கு பக்கமும் சுவர் இருக்கிறது, அது எப்பொழுது விழும் என்று யாருக்கும் தெரியாது. கூரை இருக்கிறது, அதனால் மழை காலங்களில் எந்த பயனும் இல்லை என்றேன். என்னை உற்று பார்த்தார். உன் படிப்பு எப்படி என்றார். வகுப்பில் முதல் மாணவன் என்றேன். சரி, அந்த பணத்தை எடுத்து என்ன செய்தாய் என்றார். பேருந்து நிலையத்தில் இறங்கி 12 ரூபாய்க்கு பிரியாணி சாப்பிட்டேன், மீதி நான்கு ரூபாயில் இரண்டு படி அரிசி வாங்கி அம்மாவிடம் கொடுத்தேன். இன்னும் மீது இரண்டு ரூபாய் இருக்கிறது. அதை வேண்டுமானால் உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று அவசரமாக டவுசர் பாக்கெட்டில் கையை விட்டு எடுத்து காட்டினேன். மீண்டும் ஒருமுறை என்னை உற்று கவனித்தார். பள்ளி காம்பவுண்ட்க்குள் வந்தோம். எங்கள் இருவரையும், ஆசிரியர் மாதவன் பார்த்துவிட்டார்.

என் வயிறு கலக்குவது போல் இருந்தது. பயத்தில் வியர்த்துக் கொட்டியது. இன்றோடு பள்ளிக்கு வரக்கூடாது என்று முடிவு செய்துக்கொண்டேன். கையில் டீ, பிஸ்கட் மட்டும் இல்லை என்றால் இப்படியே ஓடிவிடலாம்; சரி, இதை கொடுத்துவிட்டு ஓடிவிட வேண்டியதுதான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். ஆசிரியருக்கு வணக்கம் தெரிவித்த கடை காரர், மன்னித்து விடுங்கள் சார்… தெரியாமல் நடந்து விட்டது என்றார்.
உங்கள் கடிதம் கிடைத்ததும் மிகவும் வருந்தினேன், நான் தெரியாமல் செய்த தவறுக்கு இந்த பிள்ளை தண்டிக்கப்பட்டு விடுவானோ என்று வேதனைப்பட்டேன் என்றார். நான் ஒரு நிமிடம் திகைத்துப் போனேன். அவரை தலைநிமிர்ந்து பார்த்தேன். அவரும் என்னை கருணையுடன் கவனித்தார். நான் தவறாக கையாடல் செய்த 16 ரூபாயை அவர் எடுத்து கொடுத்தார். என்னைப்பற்றி ஆசிரியரிடம் உயர்வாகப் சொன்னார். அந்த ஒரு சம்பவம் என் வாழ்க்கை பாதையை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டது. அந்த புத்தகக் கடைக்காரர் சாதாரண மனிதர் அல்ல, எனக்காக தரையில் நடந்து வந்த இறைத் தூதர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் நினைத்திருந்தால் என்னை மாட்டி விட்டிருக்கலாம். அப்படி அவர் செய்திருந்தால் தவறான மனிதனாகவே வளர்ந்திருப்பேன்.

சமுதாயத்தில் நாம் பல நேரங்களில் “இது ஒரு சின்ன பொய்தான், இதனால் யாருக்கும் நஷ்டமில்லை” என்று சில விஷயங்களை நமக்குள் நியாயப்படுத்தி கொள்கிறோம். இந்தச் சிறிய பொய்கள் தான் நம் மனசாட்சியை மரத்துப் போகச் செய்கின்ற “மெதுவான நச்சு” என்பதை மறந்து விடுகிறோம். ஒருமுறை ஒரு சிறிய பொய்க்கு உங்கள் மனம் பழகிவிட்டால், அடுத்த முறை அதைவிடப் பெரிய பொய் சொல்ல உங்கள் மனம் தயங்குவதே இல்லை. ஒரு நல்ல மனிதன் தவறு செய்யும் போது, அவனது மனசாட்சி அவனை உறுத்திக் கொண்டே இருக்கும். அந்த உறுத்தலில் இருந்து தப்பிக்க மனித மனம் ஒரு தந்திரத்தைக் கையாளும். அதற்குப் பெயர்தான் சுய-நியாயப்படுத்துதல்.
அதாவது செய்த தவறை தன்னைத்தானே நியாயப்படுத்தி, அதற்காக மற்றவர்களிடம் வாதிடுவது. அதில் திருப்தி அடைவது. ”நான் இந்த நிறுவனத்திற்காக எவ்வளவோ உழைக்கிறேன், ஆனால் அவர்கள் எனக்கு குறைந்த ஊதியம் தான் தருகிறார்கள். அதனால், நான் இந்தச் சிறிய தொகையை தெரியாமல் எடுத்துக் கொள்வதில் தப்பில்லை.” ”அதுவும், நான் இதைத் தற்காலிகமாகத்தான் எடுக்கிறேன், என் சூழ்நிலை சரியானதும் இந்த பணத்தை திருப்பி வைத்துவிடுவேன்.”
இப்படித்தான் நம் மனம், நாம் செய்யும் தவறுகளுக்கு ஒரு ‘நல்ல காரணத்தைக்’ கண்டுபிடித்து, “நான் செய்வது தப்பில்லை” என்று நம்மையே நம்ப வைக்கிறது. இதுதான் நல்ல மனிதர்களை மிக மோசமான பாதையில் பயணிக்க வைக்கின்ற மிகப்பெரிய மோசமான வலை. நாளுக்கு நாள் தவறுகள் அதிகமாகும் போது, அந்த மனிதன் மற்றவர்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறான். வெளியில் ஒரு உன்னதமான மனிதனாகவும், உள்ளுக்குள் ரகசியங்களைக் கொண்ட ஒருவனாகவும் வாழத் தொடங்குவதால் அவனுக்குள் ஒரு “இரட்டை முகம்” உருவாகிறது.

தன் ரகசியம் எங்கே வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்தில், தன்னை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நல்ல ஆலோசகர்களிடம் இருந்து அவன் மெல்ல மெல்ல விலகி செலகிறான். நம்மை நல்வழிப்படுத்த யாரும் இல்லாத அந்தத் தனிமை, நம்மை இன்னும் ஆழமான தவறான முடிவுகளுக்குள் தள்ளிவிடுகிறது. ஒரு சிறிய தவறை செய்யும்போது, உங்களுடைய மனசாட்சி சுட்டிக்காட்டும். அந்த நேரத்தில் அதை அலட்சியப்படுத்தாமல் அங்கேயே நின்று தடுத்துவிடுங்கள். அப்படி செய்யாமல்,”இது சின்ன விஷயம்தான்” என்று நீங்கள் உங்களை ஏமாற்றிக் கொள்ளத் தொடங்கும் அந்த நொடி, நீங்கள் பாதாளத்தை நோக்கிச் செல்லுகின்ற ஆபத்தான பாதையில் முதல் அடியை எடுத்து வைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
அலட்சியத்தின் விலை – ஜெயலலிதாவின் சிறையும்… ஸ்டாலின் அரசின் வீழ்ச்சியும்!
