
என்.கே.மூர்த்தி
2026 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடையும் என்று எவரும் கணிக்கவில்லை. அதுவும் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொல்வி அடைவார் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒருவரும் எதிர் பார்க்க வில்லை. அதிர்ச்சி தந்த தோல்வி.

சமூகநீதி கொள்கையில் இந்தியாவிற்கே பாடம் எடுத்த தலைவர், வழிகாட்டிய தலைவர், மக்களால் கொண்டாடப்பட்ட தலைவர் எப்படி தோல்வி அடைந்தார்? அதை என்னால் எளிதில் கடந்துப் போக முடியவில்லை. படுக்கையில் தூங்க முடியவில்லை. அந்த அளவிற்கு என்னை பாதித்தது. திமுக ஆதரவாளர்களை சந்தித்தேன், அடிப்படை உறுப்பினர்களை, நிர்வாகிகளை சந்தித்தேன். அவர்கள் கொடுத்த தகவல்களை குறிப்பெடுத்துக் கொண்டேன்.
திமுகவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத் தலைவர்கள், அமைச்சர்கள் சிலரை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும். தேர்தலுக்கு முன்பு அவர்களின் அணுகுமுறை எப்படி இருந்தது? தேர்தல் காலத்தில் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்? கட்சியினர் கொடுத்த சின்ன சின்ன தகவல்கள் போன்ற அனைத்தையும் தொகுத்து எழுத முயற்சி செய்துள்ளேன். தோல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானது. எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கக்கூடியது. அது எப்படி நடக்கிறது? அதற்கான காரணங்களை ஆராயும்போது, எவ்வளவு பெரிய அறியாமையில் இருந்திருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்துக்கொள்ள முடியும்.
நாம் அனைவரும் ஒரு பாதுகாப்பான வளையத்திற்குள் வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைப்போம். “நான் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன், நல்ல வேலை இருக்கிறது, சமுதாயத்தில் நல்ல பெயர் இருக்கிறது, எனவே நான் ஒருபோதும் தவறு செய்ய மாட்டேன்” என்ற அசாத்தியமான நம்பிக்கை நம்மில் பெரும்பாலானோரிடம் இருக்கிறது. ஆனால், வாழ்க்கை என்பது கண்ணிற்கு தெரியாத கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட ஒரு பாதை என்பதை மறந்து விடுகிறோம். நாம் எவ்வளவு பெரிய நல்லவராக இருந்தாலும், ஒரு சிறிய கவனக்குறைவு அல்லது தவறாக நாம் எடுத்து வைக்கும் ஒரு அடி, நம் வாழ்க்கையையே மொத்தமாகச் சிதறடித்து விடுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர், தமிழ்நாட்டின் 14 ஆண்டுகள், 124 நாட்கள் முதல்வராக இருந்தவர், நூற்றுக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் வாழ்ந்தவர். அவ்வளவு பெரிய உயர்ந்த இடத்தில் இருந்தவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
”நான் எப்படி இந்த நிலைக்கு ஆளானேன் ? நான் ஒன்றும் அந்தளவிற்கு கெடுதல் செய்யக் கூடியவள் இல்லையே ? இது எப்படி நடந்தது?என்கிற கேள்விகள் அவர் மனதை வாட்டி வதைத்தது. தான் அலட்சியமாக அவ்வப்போது செய்த சிறு, சிறு தவறுகள், எதற்காகவோ, யாருக்காகவோ சொன்ன பொய்கள் அனைத்தும் ஏதோ திடீரென ஒரு நாளில் நடந்தவை அல்ல; அவை பல நாட்களாகத் தான் எடுத்த மிகச் சின்ன சின்ன தவறான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தப் புள்ளி என்பதை அவர் அப்போதுதான் உணர்ந்தார், வேதனைப்பட்டார். அந்த நிகழ்வு அவரை மரணத்திற்கே அழைத்து சென்றது.

யாரும் ஒரு நாள் காலையில் தூங்கி எழுந்து, “இன்று நான் ஒரு பெரிய துரோகத்தையோ அல்லது மோசடியையோ செய்யப் போகிறேன்” என்று முடிவெடுப்பதில்லை. வீழ்ச்சி என்பது எப்போதுமே மிக மிகச் சிறிய, மற்றவர்களுக்குத் தெரியாத, நமக்கே சாதாரணமாய் தோன்றக்கூடிய, நமக்குள் ஒரு சிறு சமரசத்தில் இருந்து தான் தொடங்குகிறது.
”பரவாயில்லை, இந்த ஒரு முறை மட்டும் இப்படிச் செய்வோம்.”
”யாரும் பார்க்கப் போவதில்லை, இதைச் செய்வதால் யாருக்கும் நஷ்டம் ஏற்படப்போவதில்லை.”
”இந்த ஒரு முறை செய்துவிட்டுப் பிறகு சரிசெய்து கொள்ளலாம்.” இப்படி நம் மனசாட்சியை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு செய்யும் அந்த முதல் சிறிய தவறுதான், நம்மை அறியாமலேயே அடுத்தடுத்த பெரிய தவறுகளுக்கு நம்மை இழுத்துச் செல்கின்ற வழுக்குப்பாறையாக மாறுகிறது.
உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள், சமூகத்தில் நல்லவர்களாக இருக்கும் மனிதர்கள், “நாம் மிகவும் புத்திசாலி, நாம் செய்யும் தவறை எவராலும் கண்டுபிடிக்க முடியாது” அல்லது “நாம் செய்யும் சிறிய தவறைக் கடவுளே மன்னித்துவிடுவார் என்கிற ஒரு குருட்டு தனமான நம்பிக்கை வந்துவிடுகிறது. இது ஒரு விதமான அகந்தை. இந்த அகந்தை தான் ஜெயலலிதாவிடம் இருந்தது. அவர்களின் பகுத்தறிவு கண்ணை மறைத்து, அவர்களைப் பாதாளத்தில் தள்ளுகிற மோசமான முடிவுகளை எடுக்க வைத்தது.
நான் ‘நல்லவன்’ மாதக்கணக்கில் விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வரக்கூடிய பக்திமான், எனக்கு எதுவும் நிகழாது என்று நினைத்துக் கொண்டு அலட்சியமாக இருக்கக் கூடாது. எந்த ஒரு சிறிய தவறும் நம்மைப் பெரிய ஆபத்தில் கொண்டு போய் சேர்க்கும் ஆற்றல் கொண்டது. எனவே, நம்முடைய ஒவ்வொரு சிறிய தேர்விலும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
(தொடர்ந்து பேசுவோம்)
