Homeசெய்திகள்கட்டுரைமகேந்திரனின் மரணம் செய்தி அல்ல... எச்சரிக்கை! விழுங்கத் தயாராகும் தவெக... விழிக்குமா அதிமுக?

மகேந்திரனின் மரணம் செய்தி அல்ல… எச்சரிக்கை! விழுங்கத் தயாராகும் தவெக… விழிக்குமா அதிமுக?

-

- Advertisement -

மகேந்திரனின் மரணம் செய்தி அல்ல... எச்சரிக்கை! விழுங்கத் தயாராகும் தவெக... விழிக்குமா அதிமுக?

அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்

தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக சந்தித்து வரும் சரிவு, அடிமட்டத் தொண்டர்களின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு ஒரு மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் பூக்கடை மகேந்திரன் என்ற ஒரு தீவிர விசுவாசி, கட்சியில் நிலவும் குழப்பங்களாலும், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் சாரை சாரையாக தவெக பக்கம் மாறுவதையும் கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகித் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

we-r-hiring

மகேந்திரனின் மறைவுக்கு ஓடிவந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள், இந்தத் தியாக மரணத்திலிருந்தாவது பாடம் கற்கப் போகிறார்களா அல்லது வழக்கம் போல சுயநலத்துடன் நாற்காலிப் போட்டியைத் தொடரப் போகிறார்களா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

தொண்டர்களின் அறியாமை!

‘வழிபாட்டு அரசியல்’ எந்த அளவிற்குத் தொண்டர்களின் கண்களைக் குருடாக்கியுள்ளது என்பதற்கு மகேந்திரனின் மரணமே சாட்சி. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் கொள்கை எதிரியான திமுகவுடன் மறைமுகக் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. திமுக எதிர்ப்பு என்ற கட்சியின் அடிநாதமான கொள்கையையும், இயக்கத்தின் எதிர்காலத்தையும் தன் பதவிக்காகக் காற்றில் பறக்கவிட்டு சுயநல அரசியல் நடத்தும் எடப்பாடி பழனிசாமியை, “அம்மா ஆட்சியை அமைப்பார்” என்று உருகி வழிபடக் கூடிய அளவிற்குத் தொண்டர்கள் இன்னும் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள்.

மகேந்திரனின் மரணம் செய்தி அல்ல... எச்சரிக்கை! விழுங்கத் தயாராகும் தவெக... விழிக்குமா அதிமுக?

தலைமையின் உட்கட்சி அரசியலையும், ஈகோ யுத்தங்களையும் அறியாமல், தனது ஒரு வயதுப் பெண் குழந்தையையும், மனைவியையும் நிர்க்கதியாக விட்டுவிட்டு ஒரு தொண்டன் மரணித்திருக்கிறான். இந்த மரணம் தற்காலிகமாகப் பரபரப்பை ஏற்படுத்துமே தவிர, எடப்பாடி பழனிசாமியோ அல்லது எஸ்.பி. வேலுமணி போன்ற கட்சியின் ‘பவர் சென்டர்’ வகையறாக்களோ இதைக் கண்டு தங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. இன்னும் 3-4 தினங்களில் மகேந்திரனின் தியாகமும், அவரது குடும்பத்தின் கதறலும் இந்தச் சுயநலக் கூட்டத்தால் முழுமையாக மறக்கடிக்கப்பட்டுவிடும் என்பதுதான் கசப்பான யதார்த்தம்.

கைகழுவும் ராஜ் சத்யன்!

கட்சி இந்த நிலைக்குச் சென்றதற்குத் தான் எவ்விதத்திலும் காரணமல்ல என்று கைகழுவும் விதமாக, அதிமுக ஐடி விங் மாநிலச் செயலாளர் ராஜ் சத்யன் தனது எக்ஸ் (X) தளத்தில், “வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்” என்று பதிவிட்டு ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். தேர்தல் தோல்விகளுக்குப் பின்னால் இருக்கும் தலைமையின் தவறுகளையும், கட்சியின் பலவீனங்களையும் மறைத்துவிட்டு, தூய தொண்டர்களின் உணர்வுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சுயநலம் இதிலும் வெளிப்படுகிறது. உண்மையில், சமூக ஊடகங்களில் திமுகவும், தவெகவும் அசுர வேகம் காட்டும்போது, அதிமுகவின் ஐடி விங் முற்றிலுமாகச் செயலிழந்து கோமா நிலைக்குச் சென்றுவிட்டது. இந்தச் சூழலில், முதலில் ராஜ் சத்யனை ஐ.டி. விங் செயலாளர் பொறுப்பிலிருந்து தூக்கியெறிய வேண்டும். அதற்குப் பதிலாக, விலைபோகாத, திறமைவாய்ந்த, கள அரசியலை நன்கு அறிந்த, சமூக ஊடகங்களை ஆயுதமாகக் கையாளத் தெரிந்த, ஆளுமைமிக்க ஒரு இளைஞரை அந்தப் பொறுப்பில் அமர்த்துவதே ஐடி விங்கிற்குச் செய்யும் முதல் அவசரச் சிகிச்சையாக இருக்கும்.

மகேந்திரனின் மரணம் செய்தி அல்ல... எச்சரிக்கை! விழுங்கத் தயாராகும் தவெக... விழிக்குமா அதிமுக?

விழுங்கும் தவெக!

அதிமுகவில் ‘தலைமை மாற்றம் தேவை’ என்பதை நாம் தொடர்ச்சியாகவும், ஆணித்தரமாகவும் வலியுறுத்தி வருகிறோம். நாம் எச்சரித்த அந்தப் பரிதாபகரமான யதார்த்தம் இன்று கண்முன்னே அரங்கேறத் தொடங்கிவிட்டது. திருச்சியில் நேற்று நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், ‘மற்றும் பலர்’ என்று பேரைக் கூடச் சொல்லாமல் வழக்கம்போலக் கடந்துபோயிருக்கிறார். 50 ஆண்டுகாலப் பாரம்பரியமிக்க ஒரு பேரியக்கத்தின் முகவரியை இபிஎஸ்-ஸின் பலவீனமான தலைமை எந்தளவுக்குச் சுருக்கிவிட்டது பார்த்தீர்களா?

நிலைமை இப்படி இருக்க, தவெக-வின் முன்னணி அமைச்சரான ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது இன்னும் ஆபத்தானது. “90 சதவீத அதிமுகவினர் தவெகவில் இணைவார்கள்; தவெகதான் தற்போதைய உண்மையான அதிமுக என்று அடிமட்டத் தொண்டர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்கிறார் அவர். தொண்டர்களின் மனமாற்றத்திற்கு, அவர்கள் தவெக பக்கம் நகருவதற்கு, தொடர் தோல்விகளும், கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்ற நினைப்பும், இபிஎஸ் தலைமை மீது ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தியுமே காரணம். இதனால்தான் நாம் மீண்டும் மீண்டும் சொல்கிறோம், அதிமுகவின் நாடித் துடிப்பை மீட்டெடுக்க உடனடியாகத் ‘தலைமை மாற்றம்’ நிகழ்ந்தே தீர வேண்டும்.

பண முதலாளிகளின் கோட்டை

இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக எம்.ஜி.ஆராலும், ஜெயலலிதாவாலும் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட இயக்கம், இன்று கார்ப்பரேட் பாணியில் பணக்காரர்களின் கூடாரமாக மாறிவிட்டது. திமுகவைப் போலவே, அதிமுகவிலும் ஒவ்வொரு தொகுதிக்கு யார் யார் வேட்பாளர் என்பதை மிக எளிதாக இறுதி செய்துவிட முடிகிறது. காரணம், மக்களிடம் செல்வாக்கு இருக்கிறதோ இல்லையோ, யாரிடம் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறதோ, யார் வசதி படைத்தவர்களோ அவர்கள் மட்டுமே வேட்பாளராக முடியும் என்ற அவல நிலை உருவாகியுள்ளது.

மகேந்திரனின் மரணம் செய்தி அல்ல... எச்சரிக்கை! விழுங்கத் தயாராகும் தவெக... விழிக்குமா அதிமுக?

கே.பி. முனுசாமி போன்ற வயதான தலைவர்கள் அதிமுகவின் முக்கியப் பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டு, கட்சியைத் தங்களின் தனிச்சொத்து போல நடத்தி வருகிறார்கள். ஆங்காங்கே இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டாலும், அவர்கள் முன்னிலைக்கு வருவதை இந்த முதியவர் கூட்டம் திட்டமிட்டுத் தடுத்து விடுகிறது. இளைஞர்களால் வழிநடத்தப்படும் தவெக, “GENZDMK” போன்ற புதிய அரசியல் அலைகளுக்கு முன்னால், அதிமுகவின் இந்த முதியோர் அரசியல் எப்படி முகம் கொடுக்கப் போகிறது?

தலைவர் பதவியை உருவாக்குங்கள்!

“பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக மாட்டேன்” என்று எடப்பாடி பழனிசாமி இன்னும் பிடிவாதம் பிடித்தால், அதிமுகவின் அழிவை யாராலும் தடுக்க முடியாது. உடனடியாகக் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி, தொடர் தோல்விகளுக்கான உண்மையான காரணங்களை ஆராய வேண்டும். பொதுச்செயலாளர் பதவிக்கு இணையாக ஒரு ‘தலைவர்’ அல்லது ‘செயல்தலைவர்’ பதவியை உருவாக்கி, அதில் தற்போதைய ‘ஜென்சி’ (Gen Z) இளைஞர்களுக்கு இணையாக அரசியல் செய்யக்கூடிய ஒரு தகுதியான இளைஞரை அமர்த்த வேண்டும்.

அந்தப் புதிய தலைமை என்பது, திராவிட இயக்கம் பற்றி ஆழமாகக் கற்றறிந்த, கொள்கைப்பிடிப்புள்ள, எந்தச் சூழலிலும் சமரசம் செய்து கொள்ளாத, அசாத்திய பேச்சாற்றல் மிக்க, பல மொழிகளைப் பேசும் திறன் கொண்ட ஒரு தகுதிவாய்ந்த இளைஞராக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழக அரசியலில் ஊடுருவியிருக்கும் ஆபத்தான ‘ரூட்மாஃபியாக்களை’ சமரசம் இன்றிச் சமாளிக்க முடியும் என்பதை அதிமுகவினர் இப்போதாவது உணர வேண்டும்.

மகேந்திரனின் மரணம் செய்தி அல்ல... எச்சரிக்கை! விழுங்கத் தயாராகும் தவெக... விழிக்குமா அதிமுக?

சிங்கை ராமச்சந்திரன், டாக்டர் VPB பரமசிவம், பேராசிரியர் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் பாபு முருகவேல், முனைவர் கோமல் அன்பரசன் போன்ற மெத்தப் படித்த, புதிய மற்றும் மாற்றுச் சிந்தனையுடன் கூடிய தொலைநோக்குச் சிந்தனை கொண்ட பல திறமையான இளைஞர்கள் அதிமுகவில் இன்னும் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவருக்கு தலைவர் பதவியை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். பெயரளவுக்குப் பதவிகளைக் கொடுத்து வெளியில் தெரியாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ள திறமையான இளைஞர்களைக் கண்டறிந்து, அவர்களிடம் கட்சியின் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். அதேநேரத்தில், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட, இயக்கத்தின் மீது தீவிரப் பற்றுள்ள கே.சி. பழனிசாமி போன்ற ஆற்றல்மிக்க மூத்த தலைவர்களை உடனே நிபந்தனையின்றி மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும். மூத்தவர்களின் வழிகாட்டுதலும், தகுதியான இளைஞர்களின் பாய்ச்சலும் இணைந்தால் மட்டுமே இந்த இயக்கத்தைக் காப்பாற்ற முடியும்.

அதிமுக தொண்டர்களே! இந்த இயக்கம் கொள்கையற்ற கார்ப்பரேட்டுகளுக்கும், பண முதலாளிகளுக்கும் முழுமையாகப் பலியாவதை இன்னமும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா? கட்சியைத் துடைத்து அழிக்க நினைக்கும் உள் முகமூடிகளிடமிருந்தும், வெளி சக்திகளிடமிருந்தும் இந்த இயக்கத்தைக் காப்பாற்ற, தார்மீக உணர்வோடு ‘தலைமை மாற்றத்திற்கு’ உடனே உரக்கக் குரல் கொடுங்கள்!

தனிக்கட்சிக்குத் தயார்..! ‘அண்ணாமலை VS விஜய்’ என மாறுமா தமிழக அரசியல்?

MUST READ