Homeசெய்திகள்கட்டுரைபழனி கோவில் நில மோசடி: தற்காலிகத் தலைவலியா, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியா? – ஓர் ஆழமான...

பழனி கோவில் நில மோசடி: தற்காலிகத் தலைவலியா, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியா? – ஓர் ஆழமான அலசல்!

-

- Advertisement -

பழனி கோவில் நில மோசடி: தற்காலிகத் தலைவலியா, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியா? – ஓர் ஆழமான அலசல்!

பழனி கோவில் நில மோசடி: தற்காலிகத் தலைவலியா, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியா? – ஓர் ஆழமான அலசல்!

we-r-hiring

சாவித்திரி கண்ணன்

​அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள். ஆனால், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு வினோதக் கூத்து இப்போது அரங்கேறி வருகிறது. பழனி முருகன் கோவில் நில மோசடி விவகாரத்தில், தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசை வெளுத்து வாங்குவதற்காகத் தமிழக பாஜக, இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று கைகோர்த்து நின்று களம் காண்கின்றன!

​அரசியல் மேடைகளில் அனல் பறக்கும் இந்த விவாதங்களின் பின்னணியை, நடந்துள்ள சம்பவங்களின் புள்ளிகளை இணைத்துப் பார்த்தால், இந்த நில மோசடி என்பது அதிரடியாக நடந்த ஒன்றல்ல; இதற்கான நச்சு வித்து கடந்த திமுக ஆட்சியிலேயே மிக நேர்த்தியாக விதைக்கப்பட்டது என்பது அம்பலமாகிறது.பழனி கோவில் நில மோசடி: தற்காலிகத் தலைவலியா, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியா? – ஓர் ஆழமான அலசல்!

​₹100 கோடி கோவில் நிலம் களவாடப்பட்டது எப்படி?
​பழனி முருகன் கோவிலுக்குப் பாத்தியப்பட்ட, சந்தை மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய் பெறக்கூடிய 1.35 ஏக்கர் நிலம் அதிகார பலத்துடன் மிகச் சாமர்த்தியமாகக் களவாடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் குற்றச்சாட்டிற்கு இந்து சமய அறநிலையத் துறை, பத்திரப் பதிவுத் துறை மற்றும் நீதித் துறை ஆகிய மூன்று தூண்களும் ஏதோ ஒரு புள்ளியில் காரணமாகியிருக்கின்றன. நிலத்தை விற்றவர்களுக்கும் கோவிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; வாங்கிய நபர்களோ தங்கள் சொந்தப் பணத்தில் வாங்கவில்லை என்பதுதான் இந்த விவகாரத்தில் உறைந்து கிடக்கும் ஆகப்பெரும் மர்மம்!

​திமுக ஆட்சியில் தொடங்கிய பிள்ளையார் சுழி
​ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கடந்த செப்டம்பர் 2025-ல் தான் இந்த நிலம் இந்து அறநிலையத் துறை வசம் மீட்கப்பட்டது. அப்போது முதற்கொண்டே, இந்த இடத்தை யாருக்கும் பத்திரப் பதிவு செய்யக் கூடாது என்று பழனி முருகன் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, சார் பதிவாளர் அலுவலகத்திற்கு மூன்று முறைக்கும் மேலாகக் கடிதங்களை அனுப்பி முட்டுக்கட்டை போட்டார்.

​ஆனால், இதை மீறி கடந்த மார்ச் 27-ஆம் தேதி திமுக ஆட்சிக் காலத்தில், இதே நிலத்தை மோசடிப் பத்திரம் மூலம் பதிவு செய்ய ஒரு கும்பல் முயன்றது. அப்போதைய சார் பதிவாளர் இந்த மோசடியைக் கண்டறிந்து, ஏப்ரல் 1-ஆம் தேதி பத்திரப் பதிவை மறுத்து ‘ரெஃப்யூசல் ஸ்லிப்’ (Refusal Slip) வழங்கினார்.

பழனி கோவில் நில மோசடி: தற்காலிகத் தலைவலியா, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியா? – ஓர் ஆழமான அலசல்!

​நீதிமன்றத்தை ஏமாற்றிய மோசடிப் பேர்வழிகள்
​இங்கிருந்துதான் ஆட்டம் சூடுபிடிக்கிறது. பத்திரப் பதிவு மறுக்கப்பட்டதால், மோசடி நபர்கள் ஏப்ரல் 10-ஆம் தேதி மதுரை உயர் நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஒருவர், “ஆவணங்களைச் சரிபார்த்துச் சரியாக இருக்கும் பட்சத்தில் பத்திரப் பதிவு செய்யலாம்” என உத்தரவிட்டதோடு, அதனை ஒரே வாரத்தில் செயல்படுத்த வேண்டும் என்றும் கெடு விதித்தார்.

​கேள்வி என்னவென்றால்: அந்த நிலத்திற்குப் பாத்தியதையுள்ள கோவில் இணை ஆணையரிடம் விளக்கம் கேட்டுவிட்டுத் தான் நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். அந்த அடிப்படை நடைமுறையைப் பின்பற்றாமல், அவசரகதியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னணி என்ன? இந்த நில மோசடிக் குற்றத்திற்கான பிள்ளையார் சுழியை ஒரு தனி நீதிபதியின் உத்தரவுதான் போட்டது என்ற கசப்பான யதார்த்தத்தை நாம் மறுக்க முடியாது.

​முந்தைய அறநிலையத் துறையின் மெத்தனம்
​நீதிமன்றத்தின் இந்தத் தவறான அறிவுறுத்தலை எதிர்த்து, அப்போதைய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும், ஆணையர் பி.என்.ஸ்ரீதரும் உடனடியாக நீதிமன்றத்தில் ஒரு சிவில் சூட் (Suit) தாக்கல் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் இந்த நிலத்தை உரிமை கொண்டாட எவனுக்கும் துணிச்சல் வந்திருக்காது. ஆனால், முந்தைய அரசு இதில் ஏன் வாளாவிருந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.

​புதிய அரசும்… இரு துறைகளின் ஒரே ஆணையரும்!
​ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய தவெக அரசு பதவியேற்கிறது. இந்தத் துறைக்கு முற்றிலும் புதியவரான இளைஞர் ரமேஷ் அமைச்சராகப் பொறுப்பேற்கிறார். ஆனால், ஏற்கனவே அறநிலையத் துறையில் ஆணையராக இருந்து, தற்போது மீண்டும் பொறுப்புக்கு வந்துள்ள குமரகுருபன் இந்த விவகாரத்தை நன்கு அறிந்தவர். ​பழனி கோவில் இணை ஆணையர் தொடர்ந்து தடை மனு போட்டு வரும் நிலையிலும், திண்டுக்கல் மாவட்ட சார் பதிவாளர்களுக்கு வலுவான கூட்டு அறிவுறுத்தலை வழங்கத் தவறியது ஏன்? இந்து சமய அறநிலையத் துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை ஆகிய இரு துறைகளுக்குமே ஆணையராக இருக்கும் குமரகுருபன், இந்த மோசடிக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் என்பதில் ஐயமில்லை.

​பக்காவாக ஸ்கெட்ச் போடப்பட்ட ஜூலை மாதக் கூத்து
​நீதிமன்ற உத்தரவை கையில் வைத்துக் கொண்டு ஜூலை 3-ஆம் தேதி அரங்கேறிய பத்திரப் பதிவு, மிகவும் திட்டமிட்ட ஒரு திரைக்கதையை நமக்குக் காட்டுகிறது.

  • ​ஜூலை 2: நிலத்தைப் பதிவு செய்யக் கூடாது எனப் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மீண்டும் கடிதம் தருகிறார்.
  • ​ஜூலை 3: தமிழக அரசு சார் பதிவாளர்களை ஜூலை 1 அன்று இடமாற்றம் செய்திருந்தது. புதிய சார் பதிவாளர் ஈஸ்வரி பணிக்கு வராமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறார்.
  • ​மதிய நேர நாடகம்: சத்திரப்பட்டியில் உள்ள சார் பதிவாளர் பாலச்சந்திரன் என்பவர் அன்றைய தினம் பொறுப்பேற்று, பாதி பத்திரப் பதிவைச் செய்துவிட்டு நகர்கிறார்.
  • ​ஜூலை 6: கொடைக்கானல் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டு, மோசடிப் பதிவு முழுமையாக நிறைவு செய்யப்படுகிறது.

​புதிதாக அரசியலுக்கு வந்தவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அத்தனை ‘சிஸ்டமேட்டிக்’ ஆக இந்த நகர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பாதிப் பதிவைச் செய்த பாலச்சந்திரன் இதுவரை தண்டிக்கப்படாதது ஏன்? மோசடியைத் தடுத்து வந்த மாரிமுத்துவுக்குச் சரியாக ஜூலை 3-ஆம் தேதி பதவி உயர்வு வழங்கி சென்னைக்கு மாற்றியது ஏன்? இந்த வினாக்களுக்குக் குமரகுருபன் பதில் சொல்வாரா?

பழனி கோவில் நில மோசடி: தற்காலிகத் தலைவலியா, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியா? – ஓர் ஆழமான அலசல்!

​கிளம்பிய புரளிகளும், பின்னணியில் இருக்கும் ஐபிடிஎஸ் (IPDS) வலையும்
​இந்த விவகாரம் தவெக அரசின் கவனத்திற்கு வரும் முன்பே, இந்துத்துவ அமைப்புகள் இதைக் கையில் எடுத்துப் போராட்டத்தைத் தொடங்கின. மறுபுறம், திமுகவின் ஐடி விங் தவெக அரசுக்கு எதிரான பிரம்மாஸ்திரமாக இதைப் பயன்படுத்தி, “அமைச்சர் ரமேஷின் உறவினர்களுக்குத்தான் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்ற அபாண்டமான புரளியைக் கிளப்பியது. இதில் வினோதம் என்னவென்றால், பாஜகவின் பிரச்சார பீரங்கி மாரிதாஸ், இந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு ஆதரவாகப் பேசி தவெக அரசைத் தாளிப்பதுதான்.

​இதன் பின்னணியை ஆராய்ந்தால், தவெக அரசு கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட ‘இந்திய அரசியல் ஜனநாயக உத்திகள்’ (IPDS) என்ற அமைப்பைச் சேர்ந்த, அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருநாவுக்கரசு என்பவர்தான், தற்போதைய தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்குச் செந்தில் பாலாஜியின் தூதுவராகச் செயல்பட்டுள்ளார். பாஜகவின் தீவிர ஆதரவாளர் எப்படி திமுக முக்கியப் புள்ளியின் தூதுவரானார் என்பது கவனிக்கத்தக்க அரசியல் சூழ்ச்சி.

பழனி கோவில் நில மோசடி: தற்காலிகத் தலைவலியா, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியா? – ஓர் ஆழமான அலசல்!

​நீதிமன்றத்தின் சவுக்கடி மற்றும் வெளிச்சத்திற்கு வரும் மர்மம்
​ஆட்சி கவிழ்ப்பு விவகாரத்தில் சுதாரித்துக் கொண்டது போல, தவெக அரசும் உடனடியாக விழித்துக் கொண்டு நீதிமன்றத்தின் வாயிலாகப் பத்திரப் பதிவை ரத்து செய்ய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், “கோவில் நிலத்தைப் பத்திரப்பதிவு செய்வதற்காக நீதிமன்றத்தையே ஏமாற்றித் திட்டமிட்டு உத்தரவு பெற்றுள்ளனர்” என்று சுட்டிக்காட்டியதோடு, இந்த மாபெரும் முறேகுகேட்டில் ஈடுபட்ட பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் மீது தங்களின் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

​எய்தவன் யார்? அம்பு யார்?
​இந்த நிலத்தை விற்ற மோசடிப் பேர்வழியான விழுப்புரத்தைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர், கடந்த ஆட்சியில் இருந்தே இதற்காக ஸ்கெட்ச் போட்டுள்ளார். ஆனால், இந்த நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் சேதுபதி, வெள்ளைத்துரை ஆகியோர் மிகச் சாதாரண நடுத்தர வர்க்கத்தினர். வங்கிக் கணக்கில் சில லட்சங்கள் கூட இல்லாத இவர்கள், தலா ரூ. 50 லட்சம் கொண்ட 4 செக்குகளைக் கொடுத்து ரூ. 2 கோடிக்கு இந்த நிலத்தைப் பெற்றுள்ளனர். சந்தை மதிப்பு 100 கோடி என்றால், அரசு வழிகாட்டு மதிப்பே 10 கோடி இருக்கும். அப்படியிருக்க, இவர்களால் எப்படி இதனை வாங்க முடியும்? ​நிச்சயமாக எய்தவர்கள் யாரோ பின்னணியில் இருக்கிறார்கள்; இந்த அம்புகள் வெறும் கருவிகள் மட்டுமே. ஏதோ ஒரு செல்வாக்கான அரசியல் பிரமுகரின் பாதுகாப்பில்தான் இந்தக் குற்றவாளிகள் இன்னும் வலம் வருகிறார்கள்.

​எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் அதிகாரி சுப்பிரமணியம் பிள்ளையின் மரணத்தை ஒரு பெரிய அரசியல் துருப்புச் சீட்டாக்கி, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதி எம்.ஜி.ஆரின் தூக்கத்தைக் கெடுத்துக் கடுமையான நெருக்கடி தந்தார். அதே பாணியில், இன்றைக்குப் பழனி கோவில் நிலத் திருட்டு விவகாரமும் தவெக அரசுக்கு ஒரு தற்காலிகத் தலைவலியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அரசியல் சூழ்ச்சி வலையை அறுத்தெறிந்து புதிய தவெக அரசு தங்களைக் காத்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

“தெரியாம பத்திரப்பதிவு நடந்துச்சுனு சொன்னா ஏத்துக்க முடியாது!” – பழனி முருகன் கோயில் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சரமாரி கேள்வி!

MUST READ