தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில், அதற்குள்ளாகவே அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைச் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் அதிரடித் தகவல்களை கசியவிட்டுள்ளன. வரும் ஆகஸ்ட் 15 சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு இந்த ‘மெகா’ அமைச்சரவை மாற்றம் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உளவுத்துறைக்கே ‘செக்’ வைக்கும் முதல்வர்!
ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகளையும், மக்கள் மத்தியில் அவர்களுக்கு இருக்கும் இமேஜையும் முதல்வர் விஜய் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். இதற்காக உளவுத்துறை மூலமாகத் தனித்தனியாக ரிப்போர்ட் பெறப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களுக்குச் சாதகமாக உளவுத்துறை செயல்பட்டது போன்ற நிலை தற்போதும் தொடரக்கூடும் என்ற சந்தேகம் முதல்வருக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், தன் மீது தனிப்பட்ட முறையில் தனி கவனம் செலுத்தி வரும் விஜய், தன் உதவியாளர்களுக்குக் கடுமையான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, தவெக அமைச்சர்கள் குறித்து ஊடகங்களிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ எந்த ஒரு சர்ச்சைச் செய்தி வந்தாலும், அதை உடனடியாகத் தனது கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ரிலீஸ் ஆகப்போகும் விக்கெட்டுகள்: லிஸ்ட்டில் கீர்த்தனா, கில்லி சரத்!
ஊழல் புகார்கள் மற்றும் தொடர் சர்ச்சைகளில் சிக்கி மக்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயரைத் தேடித்தரும் 5 அமைச்சர்களைப் பதவியிலிருந்து தூக்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த ‘நெகட்டிவ்’ லிஸ்ட்டில் இரண்டு முக்கிய பெயர்கள் முன்னிலையில் உள்ளன.
அமைச்சர் கீர்த்தனா
அமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் கீர்த்தனா. ஆரம்பத்தில், “ரீல்ஸ் (Reels) செய்து முதலீடுகளை ஈர்க்கிறேன்” என்று கூறி விமர்சனத்திற்குள்ளான போதே, முதல்வரிடமிருந்து இவருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதைத் தொடர்ந்து சமீபத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் இவர் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் கடுமையான விவாதப் பொருளானது. இது முதல்வர் விஜய்யை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியதால், வரவிருக்கும் மாற்றத்தில் கீர்த்தனாவின் அமைச்சர் பதவி பறிபோவது உறுதி என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
அமைச்சர் கில்லி சரத்
குழந்தைக்கு மாத்திரையைப் பவுடர் ஆக்கித் தரும் வீடியோ ஒன்று வெளியாகி, பெரும் சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் கில்லி சரத். இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், போராட்டம் நடத்தும் அளவிற்குச் சென்றன. அப்போதே, “நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கிறது” என்று முதல்வர் தரப்பில் இருந்து சரத்திற்குத் தூது அனுப்பப்பட்டது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு தவெக அரசு பயந்துவிட்டது என்ற தோற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அப்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், வரும் ஆகஸ்ட் மாத மாற்றத்தில் கில்லி சரத்தின் பதவியும் பறிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளே வரும் சீனியர்கள்: மாஸ்டர் ப்ளான் என்ன?
களையெடுப்பு ஒருபுறமிருக்க, மறுபுறம் அமைச்சரவையைப் பலப்படுத்தவும், எதிர்காலத் தேர்தல்களை எதிர்கொள்ளவும் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள மற்றும் இணையவிருக்கும் சீனியர் தலைவர்களைப் பயன்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே தவெகவில் இணைந்துள்ள கரூர் விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஆகிய இருவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமின்றி, அதிமுகவிலிருந்து விலகி, தங்களின் சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையவிருக்கும் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கும் தவெக அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன.

அரசியல் வியூகம்
இந்த நான்கு சீனியர் தலைவர்களுக்கும் அமைச்சரவையில் உடனடியாக இடம் வழங்கி, அதன் பிறகு வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் இவர்களைப் போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்ய தவெக தலைமை ஒரு மாஸ்டர் பிளானை வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள்ளேயே, தவறுகளைக் சகித்துக் கொள்ளாமல் முதல்வர் விஜய் எடுக்கத் துணியும் இந்த அதிரடி நடவடிக்கைகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதே பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
