தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல்கள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாகவே கேசவ விநாயகத்தின் பதவி பறிக்கப்பட்டு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தமிழக பாஜக அமைப்புச் செயலாளராக இருந்த கேசவ விநாயகம் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. 2024 மக்களவை தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி கூட்டணியை விட்டு விலகியதற்கு அண்ணாமலைதான் காரணம். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இருந்தபோதும் அமித்ஷாவும், மோடியும் அதை ஏற்க மறுத்து, அண்ணாமலையின் முடிவுகளை ஆதரித்தனர். ஆனால் அதற்கு நேர் எதிர்மாறாக கேசவ விநாயகத்தை நீக்கியுள்ளனர்.
பி.எல்.சந்தோஷ் தலைமையிலான கூட்டத்தில் அண்ணாமலை குறித்து பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு கேசவ விநாயகம் உதவி புரிவதாகவும் சொல்லப் பட்டிருக்கிறது. நயினார் நாகேந்திரனை ஓரங்கட்டுவதற்காக நடைபெறும் முயற்சிகளை, அவருடைய ஆதரவாளர்கள் எடுத்துரைத்துள்ளனர். சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிற நேரத்தில் கட்சி நிர்வாகிகயை நீக்குவது என்பது பாஜகவில் வழக்கமாக நடைபெறாது. ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக நடைபெற்றுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக உள்ள மோகன் பகவத், பல்வேறு புகார்களில் சிக்கிய நடிகை ஷில்பாஷெட்டியை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்தியாவில் பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நபர் மோகன் பகவத். அவர் சர்ச்சைக்குரிய நடிகையை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது? என்னை பொருத்தவரை இந்த விவகாரத்தில் கலாச்சார சீரழிவு தான் தென்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைமையே அப்படி இருக்கும்போது, அப்போது இங்கே இருக்கும் கேசவ விநாயகமும் அப்படித்தான் இருப்பார். அவருடைய பதவி பறிப்புக்கு இரண்டு காரணங்களை கூறலாம். முதலாவது உட்கட்சி கோஷ்டி பூசல்கள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவுகள் ஆகும்.
நயினாரின் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை இன்னமும் யாரும் மதிக்கவில்லை. அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் போன்றவர்கள் அவர் அவர் போக்கில் செயல்பட்டு வருகின்றனர். நயினார் நாகேந்திரனை பொறுத்தமட்டில், 2026 தேர்தல் முடிந்ததும் தன்னை பதவியில் இருந்து தூக்கி போட்டு விடுவார்கள். தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற்றால் பதவியில் தொடர வாய்ப்பு உள்ளன. அதற்காக தான் அவர் முயற்சித்து வருகிறார். அவருடைய கரங்களை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பை கேசவ விநாயகம் தவறிவிட்டார்.

பாஜக தலைமை தொகுதிகளை பிரித்து வழங்கிய பிறகு அண்ணாமலை, அந்த பொறுப்பில் இருந்து விலக வேண்டிய அவசியம் என்ன உள்ளது? அவருடைய அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று அவருக்கு தெரியாதா? அதை ஏன் வெளிப்படையாக சொல்ல வேண்டும். கராத்தே தியாகராஜனுக்கு யாரும் விரும்பாத பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள். இதுபோன்று எங்கெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்த முடியுமோ, அங்கெல்லாம் ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு பொறுப்பேற்று கேசவ விநாயகத்தின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையை பொறுத்தவரை அமமுக உடன் பேசியது எடப்பாடி பழனிசாமி தான். அது மிகப்பெரிய வெற்றியாக முடிந்தது.
ஓபிஎஸ் விவகாரத்தில் நிலைப்பாடு எடுக்க தவறிவிட்டது. தேமுதிக என்று 2 பேருடன் கூட்டணியை தொடர்ந்திருக்க வேண்டியது அவர்களுடைய பொறுப்பு. அதை சரிவர செய்யாததால் இன்றைக்கு பிரேமலதா திமுகவில் போய் சேர்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்கு கேசவ விநாயகத்தை பொறுப்பாக்கி உள்ளனர். தேர்தலுக்கு பின்னர் பி.எல்.சந்தோஷும் மாற்றப்படலாம். அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு அவர் தன்னுடைய மாண்பை குறைத்துக் கொண்டார்.

அண்ணாமலை இந்த தேர்தலில் இருந்து ஒதுங்கிவிட்டார். அவருக்கு தேர்தலில் போட்டியிடவோ, பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவோ வாய்ப்புகள் இல்லை. அவருடைய ஆதரவாளர்களுக்கு இடங்களை பெற்றுத்தர முயற்சிக்கலாம். ஆனால் நயினார், தமிழிசை போன்றவர்கள் அண்ணாமலை மீது தொடர்ச்சியாக கட்சித்தலைமைக்கு புகார்களை அனுப்பி வருகிறார்கள். அவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் கட்சி தலைமை முடிவு எடுக்கும். எனவே அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கு இடம் கிடைப்பதை பொறுத்துதான் டெல்லி மேலிடத்தில் அவருக்கு உள்ள செல்வாக்கு தெரியவரும்.
அதேவேளையில் அண்ணாமலை தேஜஸ்வி சூர்யா, பி.எல்.சந்தோஷ் போன்றவர்களை உள்ளடக்கிய பெரிய நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளார். அந்த நெட் வொர்க் எந்த அளவுக்கு உதவும் என்று தெரியாது. அமித்ஷா, மோடியின் விருப்பம் இருந்தால் தான், அவரால் நெட்வொர்க்கை வைத்து விரும்பியதை செய்ய முடியும். அவர்கள் விரும்பாவிட்டால் அண்ணாமலையால் எதையும் செய்ய முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


