திமுக, விசிக கூட்டணி ஒருங்கிணைந்த பாமகவுக்கு எதிராகவே தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறது. இத்தகைய சூழலில் பாமக வந்தால்தான் திமுக கூட்டணி வலிமை பெறும் என்று சொல்வது ஏற்புடையது அல்ல என்று பத்திரிகையாளர்கள் இந்திரகுமார் மற்றும் மில்டன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியை வைத்து, திமுக கூட்டணியில் விரிசல் என்று வதந்திகள் பரவுகின்றன. இதன் பின்னணியை விளக்கி பிரபல யூடியூப் சேனலில் ஊடகவியலாளர்கள் இந்திரகுமார் தேரடி, மில்டன் ஆகியோர் காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- திருமாவளவனிடம் பேட்டி எடுத்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், பாமக ராமதாஸ் அணி திமுக கூட்டணியில் இடம்பெற்றால் ஏற்றுக் கொள்வீர்களா? என்கிற தொனியில் கேள்வி எழுப்பினார். தந்தை, மகன் பிரிவுக்கு முன்பாக பாமகவுக்கு என்ன அளவுகோல் இருந்ததோ, அதே அளவுகோல்தான் தற்போதும் உள்ளது என்று திருமாவளவன் மிக வெளிப்படையாக பல மாதங்களுக்கு முன்பே பதில் அளித்துவிட்டார். மேலும், அவரது மற்றொரு பேட்டியில், கூட்டணிக்குள் வருவதும் வராமல் போவதும் ராமதாசின் முடிவு. அவர்களை ஏற்றுக்கொள்வது திமுகவின் முடிவு. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால், பாமகவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று நிர்பந்தம் கொடுக்கும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் அதை செய்யப் போவதும் இல்லை என்று தெளிவுபடுத்தி இருந்தார்.

மத்திய அரசின் பட்ஜெட்டை வரவேற்று மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்ட பிறகும் அந்த தொலைக்காட்சி இந்த கேள்வியை முன்வைப்பது ஏன்? பாமக ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வந்தால், கூட்டணி வலிமைபெறும் என்ற எண்ணத்தில் இருந்து அவர்கள் இந்த கேள்வியை கேட்கவில்லை. மாறாக ராமதாஸ் திமுக கூட்டணிக்குள் சென்றால், திருமா கூட்டணியை விட்டு வெளியேறுவார். அதனால் திமுக கூட்டணி பலவீனமடையும் என்று நினைக்கிறார்கள். அதனால் திருமாவளவனிடம் திரும்ப திரும்ப அந்த கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் திருமாவளவன் ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வந்தால், அங்கே இருக்க மாட்டோம் என்று சொல்லியுள்ளார். இதற்கு முன்பாக அவர் எப்போதும் ராமதாசை ஆதரித்து பேசவில்லை. பாமகவில் தந்தை, மகன் பிரிவை தாண்டி கொள்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? அவர் என்ன பழையபடி பாஜக, ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு மனநிலைக்கு போய்விட்டாரா? அதிமுகவுக்கு ஆகாத தினகரன் எப்படி, என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ளாரோ, அதுபோல பாஜகவை பிடிக்காத ராமதாஸ் அதிமுக உடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

இந்த கேள்வியை கேட்பவர்களின் நோக்கம் திருமாவளவனின் ஆதரவு தளத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது தான். அல்லது அவர்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்த வேண்டும். அதனால் அவரால் பாஜக இருக்கும் அதிமுக அணிக்கு போக முடியாது. வேறு வழியின்றி விஜய் தவெக உடன் கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பது சிலருடைய அஜெண்டாவாகும். அதன் காரணமாக திருமாவளவனிடம் கேளுங்கள். பரிசுகளை அள்ளுங்கள் என்று இருக்கிறார்கள். வாய்ஸ் ஆப் ஆபிஸ்களில் போய் மாத மாதம் வாங்குகிறார்கள். மையநீரோட்ட ஊடகங்கள் என்று சொல்கிற சிலர் இந்த வேலையை செய்கிறார்கள். அதேவேளையில், திருமாவளவன் ராமதாசை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த வாதத்திற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. ஏன் திருமாவளவன் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்? ராமதாஸ் கடந்த காலங்களில் தன்னுடைய சாதி வெறியால் ஏற்படுத்திய சமூக அவலங்களுக்கு மன்னிப்பு கோரினாரா? இளவரசனிடம், இளவசன் தாயாரிடம் மன்னிப்பு கோரினாரா? தமிழ்நாட்டின் முதலமைச்சரையே அவதூறாக பேசினார்.

பாமக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்கும் இடத்தில் திருமாவளவன் உள்ளார். அதில் சரிவை ஏற்படுத்துகிற நோக்கத்தில் இதை செய்கிறார்கள். திருமாவளவன் புத்திசாலித்தனமாக எதிர்கொள்கிறார். பாமக கூட்டணிக்கு வந்தால், நாங்கள் வெளியேறுவோம் என்று உறுதியாக உள்ளார். அதற்கு காரணம் எதிர் தரப்பினர் கட்டமைக்கும் பிம்பம் என்ன என்றால் திருமாவளவன் சமரம் செய்து கொள்வார் என்பது தான். திருமாவளவனிடம் திரும்ப திரும்ப பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெறுவீர்களா? என கேட்கும் பத்திரிகையாளர்கள் மருத்துவர் ராமதாசிடம் சென்று இந்த கேள்வியை கேட்பார்களா? அருள் எம்எல்ஏ, திருமாவளவன் ராமதாஸ் பெறாத பிள்ளை என்று சொல்கிறார். அந்த பிள்ளையின் குடும்பத்திற்கு அவர் கொடுத்த வலிகள் இருக்கிறது அல்லவா? இந்த விவகாரத்தை வைத்துக்கொண்டு திருமாவளவன் வன்னியர்களுக்கு எதிராக உள்ளாரா? என்று கேள்வி எழுப்பலாம். அவருடைய கட்சியிலேயே வன்னியர் ஒருவர் எம்எல்ஏவாக இருக்கிறார். வன்னியர்கள் இருக்கக்கூடிய இடங்களில் விசிகவுக்கு கிளைகள் உள்ளன.

வன்னியர், தலித்துகள் என இருதரப்பிலும் சமூக நீதி கொள்கையை புரிந்துகொண்டு, அதனால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை பயன்படுத்திக் கொண்டவர்கள் தான் வாழ்வில் முன்னேறி இருக்கிறார்கள். எனவே சமூகநீதிக்கு யார் ஆதரவாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் எங்கள் வாக்கு என்று சொல்கிறார்கள். அதன் காரணமாக தான் பாமக சுருங்கி கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் இருந்து திருமாவளவன் பேசியதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மற்றொன்று பாமக கூட்டணிக்கு வந்தால் தான் திமுக கூட்டணி பலமாகும் என்பது ஒரு கட்டுக்கதையாகும். பாமகவால் அல்லது சாதிவெறியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அதற்கு எதிரான மக்களை ஒருங்கிணைப்பது தான் திமுக மற்றும் விசிகவின் அஜெண்டா ஆகும். அதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் திமுக, விசிக. இந்த கூட்டணி ஒருங்கிணைந்த பாமகவுக்கு எதிராக தொடர் வெற்றிகளை குவித்துள்ளது. இந்த சூழலில் இரண்டாக உடைந்த பாமகவை சேர்த்தால் திமுக கூட்டணி வலிமை பெறும் என்பது ஏமாற்று வேலையாகும், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


