தங்களுடைய வாக்குகளை விஜய் பெருமளவில் பிரிக்கிறார் என்பதை அதிமுக தற்போது தான் உணர்ந்து கொண்டு, அவரை தாக்க தொடங்கியுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் இதயா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பிரபல தொலைக்காட்சிக்கு மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா அளித்த நேர்காணலில் தெரிவித்து உள்ளதாவது :- தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி என்பது உறுதியாகிவிட்டது. விஜய், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று அழைத்தால் எல்லோரும் வந்துவிடுவார்கள் என்று நினைத்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வருவார் என்கிற நம்பிக்கையை மற்ற கட்சிகளிடம் ஏற்படுத்தவில்லை. விஜய் வெளியே வந்து அரசியல் செய்யவில்லை. மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பது இல்லை என்று பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அதேநேரம், அவருக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு இருப்பதை பார்க்க முடிகிறது.
கடந்த 50 ஆண்டுகளில் புதிதாக தொடங்கப்பட்ட கட்சிகள் உருவாக்கிய வாக்கு வங்கியை விட, விஜய்க்கு அதிகமாக கிடைக்கும். அது 15 சதவீதமாகவும் இருக்கலாம் 20 சதவீதமாகவும் இருக்கலாம். நகர பகுதிகள், டெல்டா, கடலோர பகுதிகளில் விஜய்க்கு பெரிய அளவில் செல்வாக்கு உள்ளது. விஜய்க்கு பல இடங்களில் 25 சதவீதம், 30 சதவீதம் வாக்குகள் வருகிறது. தேர்தலில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு இதில் 8 சதவீதம் வரை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வேட்பாளர் நிறுத்தப்படுகிறபோது அவருடைய சமுதாயம், குற்றப் பின்னணி போன்றவற்றை வைத்து அது குறைந்துவிடும்.

விஜய், அதிமுகவை தான் ரீபிளேஸ் செய்கிறார். அதன் காரணமாகவே அதிமுகவினர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கிறார்கள். விஜய் கடுமையாக விமர்சனங்களை வைத்தபோதும், அதனை திமுக கடந்து செல்கிறது. காரணம் திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவுக்கு சென்றாலும் பரவாயில்லை. விஜய்க்கு செல்லக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். திமுக கூட்டணியில் இம்முறை காங்கிரசுக்கு இடங்கள் அதிகரிக்கப்படும். அத்துடன் தேமுதிக உடனும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
கடந்த முறை 188 இடங்களில் திமுக போட்டியிட்டது. சூரியன் சின்னத்தில் நின்ற மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்களை கழித்தால், 178 இடங்கள் வரும். அதையும் விட இம்முறை சீட்டுகள் குறையலாம். இம்முறை எந்த காரணத்திற்காகவும் கூட்டணியை விட்டுவிடக்கூடாது என்று திமுக உள்ளது. மக்களிடம் அரசுக்கு எதிரான மனநிலை உள்ளது என்பது திமுகவுக்கு தெரிகிறது. அது பிரிவது திமுகவுக்கு நல்லது. திமுக எதிர்ப்பு வாக்குகள் எக்காரணம் கொண்டும் விஜயிடம் குவியக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளது.

அதிமுக கூட்டணியில் புதிதாக தினகரன் கட்சி மட்டுமே இணைந்துள்ளது. மற்றவர்கள் எல்லாம் கடந்த 2021 தேர்தலில் அதிமுக உடன் இணைந்து போட்டியிட்டவர்கள் தான். எனவே அதிமுக கூட்டணிக்கு பழைய பலம் தான் உள்ளது. அதில் இருந்து தான் விஜய் வாங்குகிறார். மற்றொரு பெரிய சர்ச்சைக்குரிய கேள்வி என்ன என்றால்? விஜய் யாருடைய வாக்குகளை அதிகம் பிரிக்கிறார்? என்பது தான். என்னுடைய கணிப்பின்படி எங்கே எல்லாம் விஜய் இறங்குகிறாரோ, அங்கே எல்லாம் அதிமுக லீட் வருகிறது. விஜய் எங்கே எல்லாம் லீட் வருகிறாரோ, அங்கே அதிமுக 3வது இடத்திற்கு செல்கிறது. அதிமுகவிடம் திமுக அரசுக்கு எதிரான வாக்குகள் உள்ளன. அதுதான் தற்போது போக போகிறது.
திமுகவை ஆதரிக்கும் ஒருவர் நிச்சயம், விஜயிடம் போக மாட்டார்கள். விஜயால் திமுகவுக்கு சிறிய அளவிலான சேதாரம் தான் ஏற்படும். ஸ்டாலினை அதிகம் திட்டுகிறார் என்றால் அதிமுக வாக்குகள் தான் அவருக்கு போகப் போகிறது. அதிமுக விஜயை தாக்க தொடங்கியுள்ளது அதிமுகவுக்கு நன்றாக கைகொடுக்கும். விஜய்க்கு ஏறுகிற வாக்குகளை அதிமுக குறைக்கும். தற்போது 2வது இடத்தை யார் பிடிப்பது என்பது தான் போட்டியாக உள்ளது.

அதிமுக, விஜயை அடித்தே ஆக வேண்டும். திமுகவுக்கு நிகராக விஜயை அடித்தாக வேண்டும். திமுகவுக்கு போட்டி கொடுக்க வேண்டும் என்றால், அதிமுக விஜயை அடித்தே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விஜய் எக்ஸ்போஸ் ஆக ஆக அவருடைய வாக்குகள் குறையும். கரூர் விவகாரத்தில் விஜயை எக்ஸ்போஸ் செய்ய கிடைத்த வாய்ப்பை அதிமுகவும், பாஜகவும் தவறவிட்டு விட்டனர். அவரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். சீமானுக்கு விழுந்த 8 சதவீதம் வாக்குகள் என்பது திராவிட கட்சிகளுக்கு மாற்றை விரும்புபவர்கள் மற்றும் தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்கள் போட்டதாகும். இதில் சீமானுக்கு சித்தாந்த ரீதியாக போட்டவர்கள் மாற மாட்டார்கள். ஆனால் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக போட்டவர்கள், விஜயிடம் போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை அவர் விரும்பும் வாய்ப்பு வந்தால் என்டிஏவுக்கு போகலாம். தவெகவில் செங்கோட்டையன் அழைக்கிறார். அங்கே போகலாம். திமுகவிலும் அவரிடம் பேசி கொண்டு இருக்கிறார்கள். சசிகலா தரப்பில் இருந்தும் பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா – ஓபிஎஸ் இணைந்து தவெக உடன் கூட்டணி வைத்து போட்டியிடலாம் என்ற முடிவில் உள்ளனர். ஒருவேளை அவர்கள் தவெக கூட்டணிக்கு சென்றால், ஒரு சில இடங்களில் தவெக வெற்றி பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன,இவ்வாறு அவர் தெரிவித்தார்.


