சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள், அண்மையில் மாநகராட்சி அனுப்பியுள்ள திருத்தப்பட்ட சொத்து வரி நோட்டீஸ்களைக் கண்டு கடும் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் அடைந்துள்ளனர். ஏற்கனவே செலுத்திய வரியை விட 3 முதல் 4 மடங்கு வரை சொத்து வரி திடீரென உயர்த்தப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.


முதலமைச்சர் விஜய் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் சென்னை பெருநகர மாநகராட்சி, தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற வெறும் 3 மாதங்களிலேயே இத்தகைய மாபெரும் வரிச் சுமையை மக்கள் மீது திணித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
300% – 400% சொத்து வரி உயர்வு!
இதுபற்றி DT Next ஆங்கில நாளேடு இன்று (ஆகஸ்ட் 12-2026) வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னை மாநகராட்சி தனது 15 மண்டலங்களில் உள்ள 14 லட்சம் சொத்து வரி செலுத்துவோரின் கட்டடங்களை ‘தனியார் ஏஜென்சி’ மூலம், ட்ரோன் மற்றும் புவிசார் தகவல் அமைப்பு வரைபடம் வாயிலாக மறு அளவீடு செய்தது. அதில் பெரும்பாலான கட்டடங்களின் பரப்பளவு மற்றும் பயன்பாட்டில் வேறுபாடுகள் இருப்பதாகக் கூறி வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.
அண்ணாநகரைச் சேர்ந்த ராதிகா சுந்தர்ராஜ் என்பவர் 2025-26 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் ரூ. 5,000 செலுத்திய நிலையில், தற்போது எந்தவித முன் அறிவிப்புமின்றி அவரது வரி ரூ. 28,000 ஆக உயர்த்தப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2018 சுய பிரகடனம் மற்றும் தற்போதைய அளவீட்டின்படி, கட்டட மாற்றங்கள் எப்போது நடந்திருந்தாலும், பொதுமக்களின் நிதிச் சுமையைக் குறைப்பதாகக் கூறி 2025-26 இரண்டாம் அரையாண்டில் இருந்தே இந்தத் திருத்தப்பட்ட வரிகள் அமலுக்கு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வரி மற்றும் நிதி நிலைக் குழுவின் தலைவர் சர்பஜயா தாஸ் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூற்றுப்படி, இவ்வளவு பெரிய வரித் திருத்தம் மற்றும் மறு அளவீட்டுத் திட்டம் மாநகராட்சி கவுன்சில் அல்லது நிதிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படாமலேயே தன்னிச்சையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வடசென்னை மற்றும் பிற பகுதி குடியிருப்போர் நலச் சங்கங்களின் தலைவர்கள் சுட்டிக்காட்டியபடி, சொத்து வரி உயர்த்தப்படுவதால் அதனோடு நேரடியாக இணைக்கப்பட்டுள்ள சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் (Metro Water and Sewerage Tax) வரிகளும் தானாகவே உயர்ந்து, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களை பெரிய அளவில் பாதிக்கும் என்பதுதான் இதில் உள்ள ஆகப்பெரிய கொடுமையாகும்.” இவ்வாறு DT Next செய்தி கூறுகிறது.
மாநகராட்சியின் நிதிச்சிக்கல்!
சென்னை பெருநகர மாநகராட்சி கடுமையான நிதிப் பற்றாக்குறையிலும், கடனிலும் தவிப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த சீரற்ற நிதி மேலாண்மை, முறையற்ற திட்டமிடல் மற்றும் நிர்வாகக் குளறுபடிகளால் மாநகராட்சி மிகப்பெரிய நிதிச்சிக்கலில் வீழ்ந்தது.
ஆனால், அந்த நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக, திமுக செய்த தவறுகளுக்குத் தவெக அரசு தங்களின் 3 மாத ஆட்சியில் சாமானிய மக்களிடம் இருந்து வரியைப் பிடுங்கி ஈடுகட்ட முயல்கிறதா? என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. நிர்வாகக் கோளாறுகளைச் சீரமைக்காமல், ட்ரோன் அளவீடு என்ற பெயரில் குறுக்கு வழியில் மக்களிடம் 300% முதல் 400% வரை வரி வசூலித்து நிதிப் பற்றாக்குறையை அடைக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?
திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி
முந்தைய திமுக அரசு 2021 மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், நிதிப் பற்றாக்குறை மற்றும் மத்திய நிதியாணையத்தின் வழிகாட்டுதல்களைக் காரணம் காட்டித் தொடர்ச்சியாக வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்தியது. 2022 ஏப்ரல் மாதம், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. அதில் 600 சதுர அடிக்கு குறைவான வீடுகளுக்கு 25% முதல் 50% வரையிலும், 601 முதல் 1,200 சதுர அடி வீடுகளுக்கு 50% முதல் 75% வரையிலும், 1,201 முதல் 1,800 சதுர அடி வீடுகளுக்கு 75% முதல் 100% வரையிலும், 1,800 சதுர அடிக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு 100% முதல் 150% வரையிலும் வரி உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம், சென்னை மாநகராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் 264(2)-ன் கீழ், இனி ஆண்டுதோறும் அக்டோபர் 1 முதல் சொத்து வரி 6% உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
திமுக ஆட்சியை வீழ்த்தி, மாற்று அரசியலை முன்வைத்து விஜய் தலைமையில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகாவது மக்கள் இந்த வரிப்பளுவில் இருந்து மீள்வார்கள் என்று எதிர்பார்த்தால், தவெக அரசு பொறுப்பேற்ற 3 மாதங்களிலேயே நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. பொதுவான வரி விகிதங்களை உயர்த்தவில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் சாக்குப்போக்கு சொன்னாலும், GIS மறு அளவீடு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கட்டிடங்களின் பரப்பளவைக் கூடுதலாகக் கணக்கிட்டும், குடியிருப்புப் பகுதிகளை வணிகப் பகுதியாக மாற்றியும் 300% முதல் 400% வரை கூடுதலான வரி நோட்டீஸ்களை மக்கள் தலையில் தன்னிச்சையாகச் சுமத்தியுள்ளது.
பொதுமக்கள், வர்த்தகர்களின் ஆதங்கங்கள்
மின்சாரக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, குடிநீர் வரி உயர்வு மற்றும் பதிவுக்கட்டண உயர்வு ஆகியவற்றால் ஏற்கனவே விழிபிதுங்கி நிற்கும் நடுத்தர மக்களுக்கு, தவெக ஆட்சி அமைந்த 3 மாதங்களுக்குள் திடீரென அனுப்பப்படும் ரூ. 25,000 முதல் ரூ. 30,000 அளவிலான சொத்து வரி நோட்டீஸ்கள் பேரிடியாக இறங்கியுள்ளது. GIS மற்றும் செயற்கைக்கோள் அளவீட்டில் பால்கனி, சன்ஷேட், சிறிய அமைப்புகள் கூடக் கூடுதல் பரப்பளவாகக் காட்டப்படுவதாகவும், இதற்கான கணக்கீட்டு முறையை மாநகராட்சி பொதுவெளியில் தெளிவுபடுத்தவில்லை என்பதும் குடியிருப்போர் சங்கங்களின் குற்றச்சாட்டாகும்.
நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் மண்டலத் துணை ஆணையரிடம் முறையிட வேண்டும் என்பது எளிய மக்களுக்கு நடைமுறைச் சாத்தியமில்லாத ஒன்று. நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் மாநகராட்சியின் இந்த வெளிப்படைத்தன்மையற்ற, தன்னிச்சையான செயல்பாடு எளிய மற்றும் நடுத்தர மக்களை மீண்டும் வரியின் பிடியில் தள்ளியுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சியால் தன்னிச்சையாக அனுப்பப்பட்டுள்ள இந்த 300% – 400% உயர்த்தப்பட்ட சொத்து வரி நோட்டீஸ்களை தவெக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதோடு இணைந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய வரிகளின் உயர்வையும் தடுக்க வேண்டும். ட்ரோன் அளவீட்டுத் தவறுகளைச் சரிசெய்ய மண்டல அளவிலான மக்கள் குறைதீர்ப்பு முகாம்களை உடனடியாக நடத்த வேண்டும். மாநகராட்சி கவுன்சிலில் விவாதிக்கப்படாமல் தன்னிச்சையாக அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத் துறை உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
