சென்னை தண்டையார்பேட்டை ஐஓசி பேருந்து நிலையத்தில் ஆறு புதிய வழித்தடங்களில் மாநகரப் பேருந்துகள் இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நிதித்துறை அமைச்சருமான மரியா வில்சன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தண்டையார்பேட்டை அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் புதிய பேருந்துகளுக்கு எஃப்.சி. (Fitness Certificate) மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய பிரிவையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

ஓட்டுநர், நடத்துநர்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை!
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் பார்த்திபன், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் அனைவரும் தங்களது பணியை வெறும் வேலையாகக் கருதாமல், மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை மற்றும் பொறுப்பாக நினைத்து ஒருங்கிணைந்து செயல்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அதன் விளைவாகவே தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்ப முடிந்ததாகவும் தெரிவித்தார்.
மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து வருவதாகவும், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை மக்கள் மற்றும் பணியாளர்களின் கோரிக்கையாக ஏற்று நிச்சயமாக மாதவரம் பேருந்து நிலையத்திலும் ஆய்வு மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
மேலும், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தினமும் சுமார் 100 முதல் 300 கிலோமீட்டர் வரை பணியாற்றுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பணியாளர்கள் தெரிவிக்கும் குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தீபாவளி சிறப்புப் பேருந்து சேவைக்கு பாராட்டு!
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பேருந்துகள் சிறப்பாக இயக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அதற்கு உறுதுணையாக இருந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு முதலமைச்சர் சார்பில் போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். யாரும் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டபோது, அதனை ஏற்று சிறப்பாகப் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
போக்குவரத்துப் பணியாளர்களுக்கு அரசு பக்கபலமாக இருக்கும்!
எந்தத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் என்று அமைச்சர் விஜய் பார்த்திபன் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுடன் அமைச்சர் விஜய் பார்த்திபன் செல்ஃபி எடுத்துக்கொண்டதுடன், அவர்களுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் நிதித்துறை அமைச்சர் மரியா வில்சன், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
